அ.தி.மு.க.,வை மீட்க முடியாத இ.பி.எஸ்., தமிழகத்தை மீட்க போகிறாரா: முதல்வர் ஸ்டாலின்

10 ஆடி 2025 வியாழன் 11:39 | பார்வைகள் : 151
அ.தி.மு.க.,வை மீட்க முடியாத இவர் (இ.பி.எஸ்.,) தமிழகத்தை மீட்க போகிறாராம்'' என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திருவாரூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். தமிழக வரலாற்றில் இவ்வளவு திட்டங்களை எந்த அரசும் செய்து இருக்காது. எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இந்த திட்டங்களை நான் செயல்படுத்துகிறேன் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தமிழகத்தை மீட்போம்
பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியில், நமக்கு இடையூறாக இருக்கும் மத்திய அரசை சமாளித்து, இவ்வளவு சாதனைகளை செய்து இருக்கிறோம். தொடர்ந்து செய்ய தான் போகிறோம். இதனை எல்லாம் பார்த்து தாங்கி கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., என்ன செய்கிறார், தமிழ்நாட்டை மீட்போம். சாரி தமிழகத்தை மீட்போம் என்று பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று சொல்கிற கூட்டத்தில் அ.தி.மு.க.,வை சேர்த்துவிட்டார். துரோகம் செய்வது மட்டும் தான் அவருக்கு தெரியும். தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு அவரால் எப்படி உரிமை பற்றி பேச முடிகிறது.
கரப்ஷன், கமிஷன்
கூவத்தூரில் ஏலம் எடுத்து கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என தமிழகம் பார்க்காத அவலமான ஆட்சியை நடத்தினீர்கள். கொஞ்சம், நஞ்சம் இல்லை.செய்த குற்றங்களில் இருந்து காப்பாற்றி கொள்ள பா.ஜ.,விடம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தையும், தமிழர்களையும் அங்கே கொண்டு போய் அவர்களின் உரிமையில் அடகு வைத்தீர்கள்.
நீங்கள் செய்த கேடுகள், ஒன்றா, இரண்டா? அதனை எல்லாம் சரி செய்து, இந்தியாவில் தமிழகத்தின் வளர்ச்சி தான் நம்பர் ஒன் ஆக வந்து இருக்கிறது. தலைநிமிர்த்த தமிழகத்தை வளர்த்து எடுத்து இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வீடு வீடாக பிரசாரம்!
முன்னதாக திருவாரூரில் வீடு வீடாக சென்று மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். து குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை, திருவாரூரில் கருணாநிதி வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்.
தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கட்சியில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது.
களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம். வெற்றி விழாவில் சந்திப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.