Paristamil Navigation Paristamil advert login

எதிர்பார்ப்பின் சாத்தியங்கள்

எதிர்பார்ப்பின் சாத்தியங்கள்

1 ஆடி 2025 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 186


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். வடக்கில் 6,000 ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு நேற்றைய தினம் அந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படுவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இலங்கையின் அரசியலில் சலசலப்பான விடயங்கள் பல கடந்த வாரத்தில் நடந்தேறின. இதற்கிடையில், செம்மணி புதைகுழியருகில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அணையா தீபம்’ போராட்டத்தில் தாமும் பங்கெடுக்க, கலந்து கொள்ள முயன்ற அரச தரப்பு அமைச்சர் சந்திரசேகரன் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்.

அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் ஏனையோரும் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் தொடர்பில் உருவாகியிருக்கின்ற எதிர்ப்பு மனோநிலையையே காண்பிக்கிறது.

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் அவர்களது விஜயம் குறித்து அவர், இனவாதத்தைத் தூண்டும் வகையில், செயற்படக் கூடாது. காசா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் இடம்பெற்று வரும் நிலையில், அவர் எதற்காக இலங்கைக்கு விஜயம் செய்தார் போன்ற கேள்விகள் பேரினவாதிகளால் எழுப்பப்பட்டிருக்கின்றன.

இது அவர்களுடைய இனவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும். நாட்டுக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தொடர்பிலான நடைமுறைகளைக் கையாண்டிருந்தாலும் அரசுக்கெதிராகவும் வசைபாடல்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டை முன்னேற்றுகிறோம் என்ற தோரணையில் அரசாங்கம் ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டிருந்தாலும் அதனைத் திசை திருப்பும் விதத்திலான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும். அதற்காக முழுமையாக இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் விவகாரத்தில் நகர்கிறது என்ற பொருளல்ல.

மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிப் பிரதேசத்திற்குச் சென்றமை சிங்கள மக்கள் மத்தியில் கவனத்திலெடுக்கப்படாதிருந்தாலும் அதனைப் பூதாகாரமாக்கும் செயற்பாட்டிற்கு ஏற்ப பேரினவாத அரசியல் சக்திகள் முயற்சித்திருக்கின்றன என்பது ஆணையாளரது விஜயம் மற்றும் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கெதிராக முன்வைக்கப்பட்டுவரும், வெளியிடப்படும் கருத்துக்களிலிருந்து தெரியவருகிறது.

பெரும்பான்மைச் சிந்தனையுடைய பேரினவாத சக்திகளிடம் இருக்கின்ற தமிழ் மக்களின் புரையோடிப்போனஇனப் பிரச்சினை தொடர்பாக இருக்கின்ற ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடானது இன்னமும் எத்தனை காலத்திற்கு அப்பிரச்சினையை இழுத்தடித்துச் செல்லவிருக்கிறது என்பது தெரியாத ஒன்றே.

அத்துடன், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படக் கூடாது. தெற்கில் காணப்படும் மனித புதைகுழிகள் பார்க்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் தேவைகளுக்காக மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கிறார் என்ற வகையிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டியுள்ள அவர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன், நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஜுன் 23ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்த ஆணையாளர் வோல்கர் டர்க் திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றார். 

தனது விஜயத்தினை நிறைவு செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமாரவை சந்தித்துக் கலந்துரையாடிய போது, வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு இருப்பதாக தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதே நேரத்தில், இலங்கையின் அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் சரியாக கவனத்திலெடுக்கப்படாமை குறித்தும் உரிமைகள் சார்ந்த நிறுவனங்கள்

சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதுடன, காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தினை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருக்கிறார் என்பது முக்கியமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாகவும், நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆணையாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், இலங்கையின் இராஜதந்திர ரீதியான செயற்பாட்டுப்படிக்கு ஏற்ப, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்குக் கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஒரு பக்கம் உலகம் எதிர்பார்க்கின்ற மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்டுவிட்டு தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்தியதன் மூலம் அது நடைபெறாது என்பதனையும் மறைமுகமாகப் புகுத்தியிருந்தார் ஜனாதிபதி. இதுவே இலங்கையின் நிலைப்பாடு என்பது நிச்சயமானது.

இந்த இடத்தில், இலங்கையில் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்ற சர்வதேச விசாரணை என்ற எதிர்பார்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கும். இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற உள்ளகப் பொறிமுறை ஏற்பாட்டையே அனைவரும் ஏற்கவேண்டிய நிலையே அனைவருக்கும் ஏற்படும்.

அதனைத் தவிர ஒன்றுமில்லை என்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் விஜயத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது

என்பதே இறுதியானது.அதன்படி, தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு அழைக்கப்பட்டுப் போர்க் குற்றக் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறப்போவதில்லை.

இதுவரை இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக, பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கை அரசாங்கம் அழைப்படாது. இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை ஊடான விசாரணை உருவாக்கப்படாது.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கைக்கான பொறுப்புக் கூறல் திட்டக் குழுவினர் இலங்கை வருகை தரமாட்டார்கள். எதிர்பார்ப்பதுபோல் சர்வதேசத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது என்றே முடிவுக்கு வர முடியும்.

நீதிக்கான விசாரணைகள் கிடப்பில் போடப்படுவதும், அரசியல் நலன்களுக்காக, கண்துடைப்புக்காக சில விவகாரங்கள் கையிலெடுக்கப்படுவதும் நடைபெறுமே தவிர, புதிதாக எதுவும் நடைபெற்றுப் போவதில்லை. முன்னைய அரசாங்கங்கள், புதிய அரசாங்கம் என்ற வித்தியாசங்கள் இலங்கையின் அரசுக்கில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்து விட்ட போதும் தமிழ் மக்களின் புரையோடிப்போன பிரச்சினைக்குத் தீர்வைத்தர முடியாத இலங்கை அரசு இனியும் தரப்போவதில்லை.

ஆனாலும், தமிழ் மக்களின் ஒரு குறிப்பிட்ட தொகையினர்

எதிர்பார்க்கின்ற ஒற்றுமையான, ஒன்று திரண்ட மக்களாகத் தமிழர்கள் மிகப்பெரிய போராட்ட வடிவத்தினை உருவாக்கினால் ஒருவேளை எதிர்பார்ப்பிற்குச் சாத்தியங்கள் ஏற்படலாம் எனலாம். இருப்பினும், இலங்கை அரசின் மனோநிலை நிலைப்பாட்டை மாற்றுவதோ, இராஜதந்திர நலன் சார் நகர்வுகளில் மாற்றத்தினை ஏற்படுத்துவதோ சாத்தியமில்லாத இலங்கையில் எதிர்பார்ப்பிற்கான சாத்தியங்கள் குறைவே.

 

நன்றி tamilmirror

வர்த்தக‌ விளம்பரங்கள்