சீனாவில் மழை வெள்ளத்தில் சிக்கியவரை காப்பாற்றிய டிரோன்...

2 ஆடி 2025 புதன் 06:15 | பார்வைகள் : 161
சீனாவில் மழை வெள்ளத்தில் தத்தளித்த நபர் ட்ரோன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை சின்னஞ்சிறு டிரோன் சுமந்து கொண்டு 60 அடி உயரத்தில் பறந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
சீனாவின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் யுனான், கியாசு, ஹைனன் உள்ளிட்ட 13 ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
லியூசவ் என்ற நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தார்.
வெள்ளப்பெருக்கு நாலாபுறமும் சூழ்ந்ததால் அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. வெள்ளத்தில் வீடு மூழ்கிய நிலையில் அவரும் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் உதவிக்காக அந்த நபர் அபய குரல் எழுப்பினார். அவரை மீட்பதற்கு சீனாவின் பேரிடர் மீட்புத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதிலும், அந்த நபரை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தாம் வடிவமைத்த டிரோன் மூலம் அந்த நபரை பத்திரமாக மீட்க முடிவு செய்தார். அதன்படி டிரோனை அவரது வீட்டு மொட்டை மாடியை நோக்கி அனுப்பி வைத்தார். அந்தக் கயிற்றில் மணல் மூட்டையை கட்டி பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதை பத்திரமாக பிடித்துக் கொண்ட அந்த நபர், சாக்கு மூட்டையில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் ஏறத்தாழ 60 அடி உயரத்தில் ட்ரோன் பறந்து அந்த நபரை பத்திரமாக மீட்டு சாலையில் கொண்டு வந்து விட்டது. அதன் பின்னரே அந்த நபர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர் ட்ரோன் மூலம் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து அந்த டிரோனை வடிவமைத்த நபர் செய்தியாளரிடம் கூறியதாவது:
நான் வடிவமைத்த இந்த டிரோன் 100 கிலோ வரை எடையை தூக்கும் தன்மை உடையது. செங்கலையும், சிமென்டையும் தூக்குவதற்கு இந்த ட்ரோனை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
செடிகளில் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கவும் உபயோகிக்கிறோம். வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட நபர் வீட்டில் மொட்டை மாடியில் இருந்து அபயக் குரல் எழுப்பியது என்னை உள்ளபடியே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த நபர் என்னுடைய நண்பர் தான். இதனால் அவரை உடனடியாக கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். டிரோனை அனுப்பி வழிகாட்டினேன். அவரும் அதற்கு தகுந்தார் போல செயல்பட்டு பத்திரமாக கரை வந்து சேர்ந்தார்.
சீனாவில் டிரோன்களை கொண்டு மனிதர்களை பறக்க வைப்பது சட்டவிரோதமானது. இருந்தாலும் ஆபத்துக்கு வேறு வழி தெரியவில்லை. வீடுகள் மழை வெள்ளத்தில் விழுந்து வருவதை கண்டு எனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. இதனால் தான் டிரோனை அனுப்பி அந்த நபரை பத்திரமாக மீட்டேன். இதை வேறு யாரும் பின்பற்ற வேண்டாம் என டிரோனை வடிவமைத்தவர் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங் நிற்கிறது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.