Paristamil Navigation Paristamil advert login

ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலியாக ரயில் ஒன் அறிமுகம்

ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலியாக ரயில் ஒன் அறிமுகம்

2 ஆடி 2025 புதன் 06:29 | பார்வைகள் : 153


ரயில்வே சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற, 'ரயில் ஒன்' என்ற ஒரே செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிக்க, நடைமேடை சீட்டு பெற என, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.

இவை, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே செயலியில் எல்லா சேவைகளையும் அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, டில்லியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'ரயில் ஒன்' என்ற செயலியை நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கை:

'ரயில் ஒன்' செயலி வாயிலாக, ரயில்வே துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பயணியர் பெற முடியும்.

இதில் பயணியர் தங்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், அதன் நிலைப்பற்றி அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளையும் பயணியர் பெறலாம். தொலைதுார பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவுகளை 'ஆர்டர்' செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ரயில்வே நிர்வாகத்தின் உதவி எண்களையும் எளிதாக தொடர்பு கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

பயணியர் பார்சல்களை வெளியூர்களுக்கு அனுப்புவது குறித்த தகவல்களை கேட்டறிய வசதியும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களை பயன்படுத்தி, இச்செயலியை டவுன்லோடு செய்யலாம்.

ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் யு.டி.எஸ்., செயலிகளை பயன்படுத்தும் பயணியர், அதே விபரங்களை பதிவிட்டு, ரயில் ஒன் செயலியை பயன்படுத்தலாம்.

மற்ற செயலிகளில் இருப்பதுபோல், ரயில்வே வாலட் வசதியும் உள்ளது. இதன் வாயிலாக, பல்வேறு செயலிகளுக்கு மாற்றாக, ஒரே செயலியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்