ஈரானுக்கு எதிராக மீண்டும் தடைகளை விதிக்க பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து முடிவெடுக்கிறதா?

13 ஆவணி 2025 புதன் 16:34 | பார்வைகள் : 466
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், ஈரான் தனது அணு ஒப்பந்த கடமைகளை மீறி வரும் நிலையில், 2025 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஒரு சமாதானம் ஏற்படவில்லை என்றால், ஐக்கிய நாடுகள் தடைகளை மீண்டும் விதிக்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.
JCPOA எனப்படும் 2015 அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே உடன்பாட்டின் நோக்கமாக இருந்தது. ஆனால் தற்போது, ஈரான் தனது யுரேனியம் கையிருப்பை ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 40 மடங்கு அதிகமாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானின் அணு தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்திய பின்னர், பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து, சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறினாலும், தேவையான பட்சத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2231 இன் கீழ் தடைகளை மீண்டும் செயல்படுத்த சட்டத்தள உரிமை உள்ளது என வலியுறுத்துகின்றன.