நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

15 ஆவணி 2025 வெள்ளி 07:16 | பார்வைகள் : 171
நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், நாய்களை துன்புறுத்தக் கூடாது என அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை மாநகரில், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், மூர்க்கத்தனமாகவும் உள்ள நாய்களை, அவற்றின் உரிமையாளர்கள் முகக்கவசம் அணியாமல், தெருக்களில் அழைத்து செல்கின்றனர்.
இதுபோல, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல், அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு வகையைச் சேர்ந்த 'ராட்வைலர்' நாய்கள் கடித்து, சிறுவர், சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி கால்நடை துறை தலைமை அதிகாரி கமல் ஹுசைன் ஆஜரானார்.
மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் அருண்பாபு, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் விபரம்: சென்னை மாநகராட்சியில், நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், அதற்கு உரிய சான்றிதழை பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாநகரில், தற்போது 1 லட்சத்து 80,157 நாய்கள் உள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஒரு இடத்தில் பிடிக்கப்படும் நாய்கள், கருத்தடை, தடுப்பூசி போடப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் விடப்படுகின்றன. ஐந்து கருத்தடை மையங்கள் உள்ளன. கூடுதலாக, 10 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, 'எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கால்நடைத் துறை தலைமை அதிகாரி, 'உத்தேசமாக கடந்த ஓராண்டில், 20,000 சம்பவங்கள் நடந்திருக்கலாம்' என்றார்.
அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தெரு நாய்களை பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக, அவற்றை தனி காப்பகங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
அவற்றுக்கு முறையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக விரிவான திட்டத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், நாய்களை துன்புறுத்தக் கூடாது. நாய்க்கடி முக்கிய பிரச்னையாக உள்ளது.
'நோ பைட்; நோ கில்' என்ற நிலையை, அதாவது நாய்க்கடியும் இருக்கக் கூடாது; நாயை கொல்லவும் கூடாது என்ற நிலையை, தமிழகத்தில் கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின், தெரு நாய் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருவதால், இந்த வழக்கின் விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.