ஐ.நா.வின் கருப்புப் பட்டியலில் இஸ்ரேல் ... ? வெளிவரும் புதிய தகவல்

15 ஆவணி 2025 வெள்ளி 09:27 | பார்வைகள் : 225
ஆயுத மோதலின் போது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கருப்புப் பட்டியலில் இஸ்ரேல் சேர்க்கப்படலாம் என்ற தலவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள் மற்றும் இராணுவத் தளங்களில் பாலஸ்தீன கைதிகள் இழிவான முறையில் நடத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இது குறித்து கடுமையான விமசர்னத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, முதல் முறையாக ஹமாஸ் படைகள் ஐ.நா மன்றத்தின் அவமானப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேல் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் நடந்த வன்முறைகள் மற்றும் பணயக்கைதிகள் நடத்தப்பட்ட விதம் ஆகியவையே ஹமாஸ் படைகளை ஐ.நா மன்றத்தின் அவமானப் பட்டியலில் சேர்க்க காரணமாக அமைந்துள்ளது.
ஆனால், 2025ல் வெளியிடப்பட்ட ஆயுத மோதலின் போது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் இடம்பெறவில்லை. இதனிடையே, பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க இஸ்ரேல் மறுப்பது குறித்து கவலை தெரிவித்து, ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானனுக்கு குட்டெரெஸ் திங்களன்று கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், பாலியல் வன்முறைக்கு எதிரான உத்தரவுகளை வெளியிடுவது உட்பட, கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் கோரியுள்ளார்.
ஐ.நா. மேற்கோள் காட்டிய குற்றச்சாட்டுகளில் ஆண் பாலஸ்தீன கைதிகள் பலரும் இஸ்ரேலிய இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்டதும் அடங்கும்.
ஆனால், இஸ்ரேல் மீதான ஐ.நா பொதுச் செயலாளரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சார்புடைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இஸ்ரேலிய தூதர் டேனி டானன் நிராகரித்துள்ளார்.