Paristamil Navigation Paristamil advert login

ஆன்லைன் விளையாட்டு பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டு சிறை

ஆன்லைன் விளையாட்டு பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டு சிறை

22 ஆவணி 2025 வெள்ளி 12:45 | பார்வைகள் : 317


ஆன்லைன்' விளையாட்டுகளை நடத்துவோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கக்கூடிய, 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ராஜ்யசபாவிலும் நேற்று நிறைவேற்றப் பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபாவில் 12 மசோதாக்களும், ராஜ்யசபாவில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. பீஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதலே அமளியில் ஈடுபட்டன.

இதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் அலுவல்கள் முடங்கின.

சட்டம் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு நடுவிலும், மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றின.

குறிப்பாக, தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்தார்.

அதேபோல், பணம் வை த்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதாவை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ராஜ்யசபா வில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, குரல் ஓட்டெடுப்பின் வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் இந்த மசோதா சட்டமாக்கப்படும். அதன்பின், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

முடிவு சூதாட்டச் செயலிகளை விளம்பரம் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த காலகட்டத்தில், லோக்சபாவில் 12 மசோதாக்களும், ராஜ்யசபாவில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:

கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2025 / ஆக., 5 (லோக்சபா) - ஆக., 11 (ராஜ்யசபா)

கோவாவில், 2001ல் 566 ஆக இருந்த பழங்குடியினரின் மக்கள்தொகை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

சட்டசபையில், இதுவரை அவர்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாத நிலையில், பழங்குடியினருக்கு உரிய பங்களிப்பை இந்த மசோதா வழங்கும்.

இந்திய துறைமுகங்கள் மசோதா, 2025 / ஆக., 12 (லோக்சபா) - ஆக., 18 (ராஜ்யசபா)

பெரிய துறைமுகங்கள் தவிர, பிற துறைமுகங்களை திறம்பட நிர்வகிப்பதற்காக மாநில கடல்சார் வாரியங்களை நிறுவுதல் மற்றும் அதிகாரம் அளித்தல், துறைமுகத் துறையின் கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதற்காக கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலை நிறுவுதல் மற்றும் துறைமுகங்களில் மாசு, பேரிடர், அவசரநிலைகள், பாதுகாப்பு, வழி செலுத்தல் மற்றும் தரவுகளை நிர்வகித்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

வருமான வரி மசோதா, 2025/வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 / ஆக., 11 (லோக்சபா)

இந்த இரு மசோதாக்கள் வருமான வரி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்தும் நோக்கம் கொண்டது. குறிப்பாக, வருமான வரி செலுத்துவதில் புதிய முறையை தேர்வு செய்த நிறுவ னங்களுக்கு, விலக்கு அளிக்கும் பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா, 2025 / ஆக., 19 (லோக்சபா) - ஆக., 20 (ராஜ்யசபா)

இந்த மசோதா வட கிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் ஐ.ஐ.எம்., நிறுவுவதற்கு வழிவகை செய்கிறது. நிறுவனத்தின் முதல் உறுப்பினர்கள் குழு அமைக்கப்படும் வரை, அதன் செயல்பாடுகள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும்.


இது, இந்த பிராந்தியத்தின் கல்வி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்; வடகிழக்கு மாணவர்களின் நிர்வாக திறன்களை வளர்க்கும்.

ஆன்லைன் கேமிங் மசோதாவை ஊக்குவித்தல்மற்றும் ஒழுங்குபடுத்துதல், 2025 / ஆக. 20 (லோக்சபா) - ஆக. 21 (ராஜ்யசபா)

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை விளம்பரப்படுத்துபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

• சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2025 / ஆக. 12 (லோக்சபா) - ஆக. 19 (ராஜ்யசபா)

சுரங்க குத்தகைதாரர்கள் ஏற்கனவே குத்தகையில் பிற கனிமங்களை சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு விண்ணப்பிக்க மசோதா வழிசெய்கிறது. லித்தியம், கிராபைட், நிக்கல், கோபால்ட், தங்கம், வெள்ளி போன்ற கனிமங்கள் இதன் வாயிலாக சேர்க்கலாம். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

• வணிகக் கப்பல் மசோதா, 2025 / ஆக. 6 (லோக்சபா) - ஆக. 11 (ராஜ்யசபா)

நாட்டின் கடல்சார் கட்டமைப்பை நவீனமயமாக்குதல்; உள்நாட்டு சட்டங்களை சர்வதேச நடைமுறைகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பின் மரபுகளுடன் இணைத்தல், கடல்சார் உயிரிழப்புகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள இந்த மசோதா முன்மொழியப்பட்டது.

• மணிப்பூர் ஜி.எஸ்.டி., திருத்த மசோதா, 2025 / ஆக. 7 (லோக்சபா) - ஆக. 12 (ராஜ்யசபா)

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளதால், 2017ல் பிறப்பிக்கப்பட்ட மணிப்பூர் ஜி.எஸ்.டி., மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் பாதிப்பை தடுக்க அச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்த மசோதா வழிசெய்யும்.

• மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா, 2025 / ஆக. 7 (லோக்சபா)

2025- - 26ம் நிதியாண்டிற்கான சேவைகளுக்கு மணிப்பூர் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்த சில தொகைகளை செலுத்துவதற்கும், ஒதுக்குவதற்கும் இந்த மசோதா அங்கீகாரம் அளிக்கும். ராஜ்யசபாவில் இந்த மசோதா திருப்பியனுப்பப்பட்டது.

• தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025 / ஆக. 11 (லோக்சபா) - ஆக. 12 (ராஜ்யசபா)

தேசிய விளையாட்டு அமைப்புகளை அங்கீகரிப்பதற்கும், அவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த மசோதா வழிசெய்யும். விளையாட்டு தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கு ஒரு தேசிய விளையாட்டு தீர்ப்பாயத்தை அமைப்பதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

• தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு (திருத்த) மசோதா, 2025 / ஆக. 11 (லோக்சபா) - ஆக. 12 (ராஜ்யசபா)

தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு சட்டம், 2002ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை செயல்படுத்த தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தை நிறுவ இந்த மசோதா உதவும். விளையாட்டுகளில் ஊக்கமருந்து எதிர்ப்புக்கான தேசிய வாரியம், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஒழுங்குமுறை குழு மற்றும் மேல்முறையீட்டுக் குழுவிலிருந்து எந்தத் தகவலையும் பெற இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

• சரக்குப் போக்குவரத்து மசோதா, 2025 / ஜூலை 21(ராஜ்யசபா)

கப்பல் ஆவணங்களுக்கான சட்ட கட்டமைப்பைப் புதுப்பித்து எளிமைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 1856 ஆம் ஆண்டு இந்திய சரக்குப் போக்குவரத்து மசோதா சட்டத்தை மாற்றும்.

• கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் மசோதா, 2025 ; கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, 2025 ; சரக்கு ஏற்றிச்செல்லும் மசோதா --/ ஆக. 6 (ராஜ்யசபா)

கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் சட்டம், 1925ல் இந்த மசோதா மாற்றம் செய்கிறது. துறைமுகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களின் விஷயத்தில் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் விலக்குகளை இந்தச் சட்டம் நிறுவுகிறது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்