Paristamil Navigation Paristamil advert login

கட்டுகட்டாக ரூ.12 கோடி! பணம்: கர்நாடகா காங்., எம்.எல்.ஏ., கைது

கட்டுகட்டாக ரூ.12 கோடி! பணம்: கர்நாடகா காங்., எம்.எல்.ஏ., கைது

24 ஆவணி 2025 ஞாயிறு 08:09 | பார்வைகள் : 170


கோவாவில் நடத்தி வரும் சூதாட்ட விடுதிகளில் சட்டவிரோதமாக, 'பெட்டிங்' நடத்தி, சொத்து குவித்ததாக கர்நாடகாவின் சித்ரதுர்கா காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை, அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரது வீட்டில் நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத 11 கோடி ரூபாய் ரொக்கம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது கட்சியின் சித்ரதுர்கா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் வீரேந்திர பப்பி, 50. இவர் அண்டை மாநிலமான கோவாவில், 'காசினோ' எனப்படும் சூதாட்ட விடுதிகளை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.

வரி ஏய்ப்பு இவர் சட்டவிரோதமாக, 'ஆன்லைன் - ஆப்லைன் பெட்டிங்' நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து, வெளி நாடுகளில் முதலீடு செய்து, தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணிக்கே, வீரேந்திர பப்பிக்கு, 'ஷாக்' கொடுத்தனர்.

சித்ரதுர்கா, பெங்களூரு, ஹூப்பள்ளி, பெங்களூரு ரூரல், ஜோத்பூர் உட்பட, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அவருக்கு சொந்தமான கோவாவின், 'பப்பீஸ் காசினோ, கோல்டு, ஓஷன் 7 காசினோ, பப்பீஸ் காசினோ பிரைடு, பிக் டாடி' ஆகிய சூதாட்ட விடுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூரின் வசந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, சஹகார நகரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே, வீரேந்திர பப்பி, தன் நிறுவனங்கள், கோவா சூதாட்ட விடுதிகளை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது.

சோதனையில், சில முக்கியமான ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி வரை சோதனை தொடர்ந்தது. இந்த சோதனையில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் உட்பட, 12 கோடி ரூபாய் ரொக்கம், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நான்கு சொகுசு கார்கள், 17 வங்கி கணக்குகள், இரண்டு வங்கி லாக்கர்கள் ஜப்தி செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது, வீட்டில் வீரேந்திர பப்பி இல்லை; வடகிழக்கு மாநிலமான சிக்கிம் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

சிக்கிமின் கேங்டாக்கில் உள்ள ஹோட்டலில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. அதன்படியே அவரை அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அவரை சிக்கிம் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றமும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. இதன்படி நேற்றிரவு விமானத்தில் பெங்களூருக்கு அழைத்து வந்தனர். பெங்களூரின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை தொடர்ந்தது.

கேமிங் தொழில் இதுகுறித்து, அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டவிரோதமாக பெட்டிங் நடத்திய குற்றச்சாட்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, சிக்கிமில் கைது செய்யப்பட்டார்.

'எம்.ஜி.எம்., காசினோ, மெட்ரோபாலிடன் காசினோ, பெல்லாஜியோ காசினோ, மரினா காசினோ' உட்பட, பல்வேறு சர்வதேச சூதாட்ட விடுதிகளின் உறுப்பினர் அட்டைகள், பல வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகள், சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உறுப்பினர் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன .

வீரேந்திர பப்பி, தன் நண்பர்களுடன் சூதாட்ட விடுதி ஒப்பந்தம் பெறுவது தொடர்பாக பேச்சு நடத்தும் நோக்கில் சிக்கிம் சென்றிருந்தார். இவரது சகோதரர் நாகராஜ், இவரது மகன் பிருத்வி ராஜ் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வீரேந்திர பப்பியின் கேமிங் தொழில்களை, அவரது சகோதரர் திப்பேசாமி, துபாயில் இருந்து நிர்வகிக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்