கோவில்களில் அரசியல் நடவடிக்கை கூடாது: கேரள ஐகோர்ட் கண்டிப்பு

25 ஆவணி 2025 திங்கள் 12:00 | பார்வைகள் : 123
கோவில்களில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பதை தேவசம் போர்டுகள் உறுதி செய்ய வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், அரசியல் நடவடிக்கைகளுக்காக கோவில்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதை தடுக்க உத்தரவிட கோரியும் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
புண்படுத்துகிறது
அந்த மனுவில், 'கோழிக்கோட்டில் உள்ள தாலி கோவில், அட்டிங்காலில் உள்ள ஸ்ரீ இந்திலயப்பன் கோவில் மற்றும் கொல்லம் கடக்கால் தேவி கோவில், அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப் படுகின்றன.
'இது கோவில்களுக்கு வரும் பக்தர்களையும், அவர்களது மத உணர்வுகளையும் புண்படுத்துகிறது' என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மலபார் தேவசம் போர்டு சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 'இந்த நிகழ்ச்சியை தான் நடத்த வேண்டும்; இதை நடத்தக் கூடாது என தேவசம் போர்டுகளுக்கு நீதிமன்றங்கள் அறிவுறுத்துவது கிடையாது.
'தவிர மத நிறுவனங்கள் துஷ்பிரயோக தடுப்புச் சட்டம், 1988ன்படி, கோவில்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் என்பதை கோவில் நிர்வாகங்கள் நன்கு அறியும்.
'எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை' என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மத நிறுவனங்கள் துஷ்பிரயோக தடுப்புச் சட்டப்படி, கோவிலோ, அதை நிர்வகிப்பவரோ, கோவில் வளாகத்தை அரசியல் நடவடிக்கைகளுக்கான பரப்புரை இடமாக பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.
அதே போல், கோவில் சொத்துகளை, வருமானத்தை அரசியல் கட்சியின் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும்.
அரசியல் கட்சிக்காக கோவிலுக்குள் விழா நடத்துவது, சமூக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
சட்ட மீறல்கள்
எனவே, அரசியல் நடவடிக்கைகளுக்காக கோவில்கள் பயன் படுத்தப்படக் கூடாது. இதை திருவிதாங்கூர், மலபார் மற்றும் கொச்சின் தேவசம் போர்டுகள் உறுதி செய்ய வேண்டும்.
கோவில்களுக்குள் சட்டமீறல்கள் நடந்திருந்தால் அதை எந்த தாமதமும் இல்லாமல் தேவசம் போர்டுகள் நீதித்துறையின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
கோவில் வளாகத்திற்குள் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளுக்கும் நிச்சயம் இடம் தரக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3