எப்போதெல்லாம் கை கழுவலாம்?
2 கார்த்திகை 2020 திங்கள் 07:16 | பார்வைகள் : 10072
கொரோனா பரவியதில் இருந்து தான் தவறாமல் சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்காக அல்ல கைகழுவும் பழக்கம் இயல்பாகவே உடல் நலத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். கிராமங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் கை, கால் கழுவி விட்டு வீட்டுக்குள் வர வேண்டும் என குழந்தைகளை, பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் நகரங்களில் பெரும்பாலான வீடுகளின் முன்பகுதியில் கைகழுவுதற்கு ஏற்ற வசதி இல்லை.
நெருக்கமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த நிலை உள்ளது. அன்றாடம் காலை எழுந்ததும் பல் துலக்குவது, குளிப்பது போன்று தான் அடிக்கடி கைகழுவும் பழக்கம் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, இருமல், வாந்தி, பேதி போன்ற பெரும்பாலான நோய்கள் கைகள் மூலமாகவே ஏற்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் கைகழுவ வேண்டும் என்பதை கற்றுத்தருவதுடன் தாங்களும் அந்த பழக்கத்தை கைவிடாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கை கழுவும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்பதை உணரும் தருணம் இது.
எப்போதெல்லாம் கை கழுவலாம்?
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ மறக்க கூடாது.
* வளர்ப்பு பிராணிகளை தொட்ட பின்னர் கை கழுவுவது முக்கியமான செயல்.
* பெரியவர்கள் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொட நேர்ந்தால் அதற்கு முன்பாக கட்டாயம் கைகழுவுங்கள்.
* கழிவறை சென்று வந்ததும் உடனடியாக கை கழுவுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.
* சளி, இருமல் இருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன்பு கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.