Paristamil Navigation Paristamil advert login

கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் கண்டனம்: உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு

கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் கண்டனம்: உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு

5 ஐப்பசி 2025 ஞாயிறு 09:09 | பார்வைகள் : 172


கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுக, விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி, கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது, தமிழகத்தையும் தாண்டி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிட்ட சதி என்று, த.வெ.க., கூறி வருகிறது. ஆனால், த.வெ.க.,வும், விஜயும் தான் இதற்கு பொறுப்பு என, தி.மு.க.,வினர் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.

சிறப்பு குழு இந்நிலையில், கரூர் துயரத்தை சுட்டிக்காட்டி, அரசியல் கட்சி தலைவர்களின், 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், கரூர் துயரம் தொடர்பாக, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.

அத்துடன், 'விஜய் பயணம் செய்த பஸ் மீது, இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட​ வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாதது ஏன்? விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?' என, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதி, 'கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு, விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர். அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை' என்றும் கண்டனம் தெரிவித்தார்.

ஆலோசனை இதனால், விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும், விஜய் மீது வழக்கு பதியவும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும் என, விஜய் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும், தமிழக காவல் துறை செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாகவும், த.வெ.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்