அ.தி.மு.க., பழனிசாமியின் நாமக்கல் பிரசாரம்.. ரத்து!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 139
நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், ப.வேலுார் சட்டசபை தொகுதிகளில் இன்றும், நாளையும் நடக்கவிருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதனால், பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த ஜூலை 7ல், கோவையில், பழனிசாமி தன் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ச்சியாக, நுாற்றுக்கும் மேற்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் பிரசாரத்தை முடித்த அவர், இன்று, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில், திருச்செங் கோடு அண்ணாதுரை சிலை அருகிலும், குமாரபாளையத்தில் ராஜம் தியேட்டர் அருகிலும் பிரசாரம் செய்ய இருந்தார்.
அதேபோல் நாளை, நாமக்கல் தொகுதியில், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலும், ப.வேலுார் தொகுதியில், பொத்தனுார் நான்கு சாலை பகுதியிலும், மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, போலீசிடம் விண்ணப்பித்து அனுமதியும் பெற்று இருந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நடக்கவிருந்த பழனிசாமியின் பிரசாரத்துக்கு வழங்கிய அனுமதியை, போலீசார் ரத்து செய்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில், 'தேசிய நெடுஞ்சாலைகளில் பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், பழனிசாமி பிரசாரத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.
கடந்த, 27ல், த.வெ.க., தலைவர் விஜய், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கல்லில், குறித்த நேரத்திற்கு விஜய் வரவில்லை. அதனால், அவரை எதிர்பார்த்து கடும் வெயிலில் காத்திருந்த கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் அனல் தாங்க முடியாமல் மயங்கினர். இதில், 34 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
பின், கரூரில் நடந்த பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் பலியாகினர்.
இது, நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரசார, பொதுக்கூட்டங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து, 'பொதுக்கூட்டம் நடத்துவது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு, அரசு தரப்பில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்; அதுவரை, நெடுஞ்சாலைகளில் 'ரோடு ஷோ' மற்றும் பேரணி நடத்த, எந்த கட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில், பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள், நெடுஞ்சாலை பகுதி என்பதால், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், தனியாருக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்குமாறு, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
போலீஸ் உத்தரவை அடுத்து, பழனிசாமி பிரசார பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிரசாரம் செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்தில், இடம் தேர்வு செய்யும் பணியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக உள்ள இரண்டு தனியார் இடங்களை தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி.,யிடம் விண்ணப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 8ம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், 9ம் தேதி நாமக்கல், ப.வேலுார் தொகுதியிலும், 10ம் தேதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு தொகுதியிலும், பழனிசாமி பிரசாரம் செய்வார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1