Paristamil Navigation Paristamil advert login

எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்? கவர்னர் ரவி

எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்? கவர்னர் ரவி

6 ஐப்பசி 2025 திங்கள் 06:11 | பார்வைகள் : 183


தமிழகத்தில் நான் பயணம் செய்யும் போது, சுற்றுச்சுவர்களில், 'தமிழகம் போராடும்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது; யாருடன் போராடும்?'' என, கவர்னர் ரவி கேள்வி எழுப்பினார்.

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், வள்ளலாரின், 202வது பிறந்த நாள் விழா மற்றும் திருஅருட்பா நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில், கவர்னர் ரவி பேசியதாவது:


தமிழக கவர்னர் மாளிகை, கடந்த இரண்டு நாட்களாக ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக, ஆன்மிக கூடமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த வள்ளலாரின் போதனைகள், இந்த இடத்தை புனிதமாக்கி விட்டன.

வள்ளலாரின் போதனைகள், உலகில் இப்போது நடக்கும் பிரிவினைவாதம், வறுமை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக உள்ளன. அவரின் தத்துவங்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தன. ஒவ்வொரு நாளும், பத்திரிகைகள் வாயிலாக தீண்டாமை எனும் பெயரில், கொலை, அடிதடி சம்பவங்களை காணுகிறேன். பட்டியலின சமூகத்தினர், நம் சகோதர, சகோதரிகள். அவர்களை இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது.

இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் நடக்கின்றன. தமிழகம், கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. உயர் கல்வி சேர்க்கையில், தேசிய சராசரியை விட, தமிழகத்தில் சேர்க்கை சதவீதம் அதிகம். மேலும், எழுத்தறிவு பெற்றவர்கள் ஏராளம். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தம் அளிக்கிறது.

இந்த பிரச்னைகளுக்கு, சமுதாய சீர்திருத்தமே தீர்வு. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் நம்மை சென்றடைய கூடாது என்பதில், அரசியல், கண்ணும் கருத்துமாக உள்ளது. நம்மை பிரித்து ஆள்வதையே, அரசியல் ஒரு மார்க்கமாக கொண்டுள்ளது. இப்படி இருந்தால் தான், அவர்கள் ஆட்சியில், அவர்களுக்கு சாதகமாக செய்து கொள்ள முடியும். சமூக பாகுபாடுகளை களைய, வள்ளலாரின் பாடல்களே ஒரே வழி. அதை பாடங்கள் வாயிலாக, நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பாடங்கள் மூலமாக சென்றால், குழந்தைகளின் மனதில் பதியும்.

அதனால், இனி வரும் சமுதாயம் பாகுபாடு இன்றி உருவாகும்.

தமிழகம் முழுதும் நான் பயணம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள சுவர்களை பார்ப்பேன். அதில், 'தமிழகம் போராடும்' என்று எழுதப்பட்டிருக்கும்; யாருடன் போராடும்? தமிழகத்தை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்.

இதுபோன்ற மனநிலையில் இருந்து அனைவரும் மாற வேண்டும். யாருடனும் இங்கு சண்டை கிடையாது. நாம் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்