Paristamil Navigation Paristamil advert login

டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள்: கைது செய்தது சென்னை போலீஸ்

டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள்: கைது செய்தது சென்னை போலீஸ்

6 ஐப்பசி 2025 திங்கள் 07:11 | பார்வைகள் : 153


இணையவழியில், 'டிஜிட்டல்' கைது செய்து, பண மோசடி செய்ய பயன்படுத்தும், 'சிம் பாக்ஸ்' கருவிகளுடன், டில்லியில் பதுங்கி இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பதுங்கி, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை கைது செய்ய, மாநில சைபர் குற்றப் பிரிவு போலீசார் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னையில் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், ஒரே நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறுஞ்செய்தி மற்றும், 'லிங்க்' அனுப்பும், 15 'சிம் பாக்ஸ்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், கைதான நபர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து, சிம் பாக்ஸ் களை அழித்ததும் தெரியவந்தது.

மேலும், இவர்களின் கும்பல் தலைவனாக, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சோஹல் அலாம் நுத்தீன் என்பவர் செயல்பட்டு வருவதும், இவர் தன் கூட்டாளிகளை, டில்லி, மும்பை மற்றும் பீஹாரில் பதுங்க வைத்து, அவர்கள் வாயிலாக பண மோசடி செய்து வருவதும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்ய, எஸ்.பி., ஷஹானாஸ், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகளை அமைத்த மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், அப்படையினரை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்.

இவர்கள், டில்லி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பீஹாரில் சோதனை நடத்தினர். அப்போது, டில்லியில் பதுங்கி இருந்த தாரிக் அலாம், 19; லோகேஷ்குமார், 33; அசோக்குமார், 40, ஆகியோரை கைது செய்தனர்.

கைதான நபர்களிடம் இருந்து, மொத்தம், 44 'சிம் பாக்ஸ்'களை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சோஹல் அலாம் நுத்தீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்