Paristamil Navigation Paristamil advert login

தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்

தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்

6 ஐப்பசி 2025 திங்கள் 10:11 | பார்வைகள் : 190


தொடர் நெருக்கடிகளால் கடும் குழப்பத்தில் இருக்கும் த.வெ.க., தலைவர் விஜய், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருவதாக, அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் சூறாவளியாக வீசி வருகிறது.

த.வெ.க., நிர்வாகிகள் முறையாக திட்டமிட்டு, பிரசார கூட்டத்தை நடத்தாததே காரணம் என, அரசு தரப்பும், 'காவல் துறையின் பாதுகாப்பு குறைபாடே நெரிசலுக்கு காரணம்' என, த.வெ.க., தரப்பும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் விஜய் சரியான தலைமை பண்புடன் செயல்படவில்லை என்று கடுமையாக சாடிய சென்னை உயர் நீதிமன்றம், கரூர் சம்பவத்தை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட்டது.

ஆலோசனை அக்குழு விசாரணையை துவங்கி இருக்கும் நிலையில், கட்சியின் மொத்த செயல்பாடும் முடங்கி இருப்பதாக, விஜய் கருதுகிறார்.

இன்னும் ஆறு மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து, கடந்த சில நாட்களாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன், விஜய் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், அதிரடியாக சில விஷயங்களை செய்ய விஜய் முடிவெடுத்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அக்கட்சி மூத்த தலைவர்கள் கூறியதாவது:

துவக்கத்தில் விஜயின் பேச்சை, தி.மு.க., சாதாரணமாகவே எடுத்துக் கொண்டது. ஆனால், த.வெ.க.,வின் மதுரை மாநாடு மற்றும் அவருடைய பிரசார கூட்டங்களுக்கு அலை அலையாக திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தது.

தி.மு.க.,வையும், தமிழக அரசையும், பிரசார கூட்டங்களில் மிக கடுமையாக விமர்சித்த விஜய்க்கு, தமிழக அரசு மற்றும் தி.மு.க., தலைவர்கள் வரிக்கு வரி பதில் சொல்லத் துவங்கினர்.


இந்நிலையில் தான், கரூர் உயிரிழப்பு சம்பவம், தி.மு.க.,வுக்கு வாய்ப்பாக கிடைத்தது.

த.வெ.க., கரூர் கிழக்கு மாவட்டச் செயலர் மதியழகன், கட்சி பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சிக்காரர் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவுக்காக, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்ச்சியாக, சமூக வலைதளப் பதிவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், தமிழகம் முழுதும் த.வெ.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

இதற்கிடையில், 'விஜய் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின், அவரை கைது செய்யவும், தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

அதனால், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள விஜயும் தயாராக உள்ளார். ஆனால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற நிச்சயமற்ற சூழல் நீடிப்பதை, விஜய் விரும்பவில்லை.

முற்றுகை போராட்டம் அதனால், ஆனந்தும், நிர்மல்குமாரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டில் தங்களுக்கு சாதகமான நிலை வரவில்லை என்றால், ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தை முற்றுகையிடும் திட்டத்தை விஜய் வகுத்துள்ளார்.

'கைது செய்ய வேண்டும் என்றால், என்னையும், கட்சியினரையும் உடனே கைது செய்யுங்கள்' என, டி.ஜி.பி.,யை சந்தித்து முறையிடவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

சிறை சென்று திரும்பினால், அரசியல் ரீதியாக கூடுதல் பலம் கிடைக்கும்; அதன்பின், நிம்மதியாக தேர்தல் வேலை பார்க்கலாம் என்ற முடிவில், விஜய் இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

வர்த்தக‌ விளம்பரங்கள்