Paristamil Navigation Paristamil advert login

கொடுத்துப் பெறுதல்....

கொடுத்துப் பெறுதல்....

6 ஐப்பசி 2025 திங்கள் 07:16 | பார்வைகள் : 112


ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. 

மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு “உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். 

அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்