திருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்
26 ஐப்பசி 2020 திங்கள் 07:08 | பார்வைகள் : 9656
திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
உணவுப் பழக்கம்:
புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே செய்தாலும் சமையலை தவிர வேறு எந்த வீட்டு வேலையையும் செய்ய விடமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள். அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மகிழ்ச்சி:
திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள். அத்துடன் கணவருக்கு பிடித்தமான உணவு பட்டியலை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை சமைத்து கொடுப்பதற்கும் மனைவி ஆர்வம் காட்டுவார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் சமையலை செய்வது நல்லது.
மன நிம்மதி:
திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.
வீட்டில் அதிக நேரம் செலவிடுவது:
திருமணத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும்.
தேனிலவுக்கு செல்லும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானது. கடற்கரையில் நடந்தபடி பேசுவது, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது என உடல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடையை அதிகரிக்க வைப்பது எளிது. குறைப்பதுதான் கடினம். அலட்சியமாக இருந்தால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.
கர்ப்ப காலம்:
திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன் உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். ஆதலால் திருமணமான புதிதில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.