Paristamil Navigation Paristamil advert login

பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்: பிரிட்டன் பிரதமர்

பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்: பிரிட்டன் பிரதமர்

9 ஐப்பசி 2025 வியாழன் 15:22 | பார்வைகள் : 106


இந்தியா - பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கும்,'' என, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், 2028ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கப் போகிறது என்றும் கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியா வுக்கு நேற்று வந்த கெய்ர் ஸ்டாமர், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார்.

அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலை., துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் பேச்சு நடத்தவுள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நேற்று அவர் கூறியதாவது:

இந்தியாவுடன் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில், கடந்த ஜூலை மாதம் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். எந்தவொரு நாடும் செய்து கொள்ளாத வகையில், மிக சிறந்த ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தம் காகிதத்துடன் முடிவடைவது அல்ல. வளர்ச்சிக்கான ஒரு துவக்கப்புள்ளி.

வரும், 2028ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறவுள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் இனி வேகமெடுக்கும். இரு நாட்டு ஒப்பந்தங்களால் எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டப் போகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி லண்டன் சென்றிருந்தபோது, இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் சந்தை அணுகுதல் அதிகரிக்கும், ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் குறையும், 2030க்குள் இரு நாட்டு வர்த்தகமும் இரட்டிப்பாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் குளிர்பானங்கள், அழகு சாதனப் பொருட்கள், கார்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை கணிசமாக குறையும்.

பிரிட்டன் விஸ்கி மது வகைகளுக்கு 150 சதவீதமாக இருந்த வரி 75 சதவீதம் என பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்