Paristamil Navigation Paristamil advert login

நோயை விரட்டும் மூலிகைகள்

நோயை விரட்டும் மூலிகைகள்

2 ஐப்பசி 2020 வெள்ளி 13:06 | பார்வைகள் : 10175


 மழைக்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் வைரஸ் நோய்தொற்றுகள் பரவுவதற்கு வழிவகுக்கும். அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதவை. இயற்கையானவை. பருவகால வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இவை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை. அத்தகைய மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.

 
துளசி: துளசியில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. முக்கியமாக துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம்.
 
 
பூண்டு: பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பூண்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பற்களை அப்படியே சாப்பிடலாம். பாலில் வேக வைத்தும் அருந்தலாம். பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆண்டி வைரல் பண்புகளும் பூண்டுவில் உள்ளது.
 
பெருஞ்சீரகம்: இது நறுமணத்துடன் கூடிய சுவை கொண்டது. வைரஸ் தடுப்பு பண்புகளையும் உள்ளடக்கியது. உடல் வலி, வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங்களில் வைரஸ் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒருவேளையாவது பெருஞ்சீரக தேநீர் பருகி வரலாம்.
 
கற்பூரவல்லி: இது வைரஸ் தொற்றுநோய்களை குணப்படுத்தும் மூலிகையாக வீட்டு வைத்தியங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமான சபிகினோலைடு கலவை உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வைரஸ் தாக்குவதை தடுக்க தினமும் ஒரு கப் கற்பூரவல்லி தேநீர் பருகலாம். கற்பூரவல்லியுடன் சில மூலிகைகளை சேர்த்தும் உபயோகிக்கலாம். அதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்திக்கொள்ளலாம்.
 
இஞ்சி: இது வைரஸ் தடுப்பு, நோய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தினமும் இஞ்சியை உட்கொண்டால் இன்பளூயன்ஸா, ஆர்.எஸ்.வி, எப்.சி.வி போன்ற வைரஸ்களை நெருங்கவிடாமல் தடுக்கலாம். வைரஸ் தொற்றுகளுடன் உண்டாகும் சளி, இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை போக்குவதற்கு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
 
மிளகுக்கீரை: இருமல், சளி உள்ளிட்ட வைரஸ் நோய் தொற்றுகளுக்கான மருந்துகள் தயாரிப்பதற்கு மிளகுக்கீரையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறில் மென்டோல் மற்றும் ரோஸ்மரினிக் அமிலங்கள் உள்ளன. அவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. மழைக்காலத்தில் மிளகுக்கீரை தேநீரும் பருகலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்