குழந்தையின்மை என்றால் என்ன? அதற்கான காரணமும்... தீர்வும்...
25 ஆவணி 2020 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 9410
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான். அதற்கு ஆண், பெண்களின் வாழ்வியல் முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை மற்றும் மனமகிழ்ச்சி இன்மை காரணமாக உள்ளது.
தம்பதிகள் இயல்பான தாம்பத்தியம் மேற்கொள்ளும்போது, இயற்கையாக கர்ப்பம் நிகழ்ந்துவிடும். அதுதான் இயற்கை விதி. அதே நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வயது, சிலவித உடல் பாதிப்புகள், மனப் பிரச்சினை, ஆரோக்கிய குறைபாடு போன்றவை தாம்பத்தியத்திற்கு தடையாக இருக்கும். அந்த தடைகளை போக்கி ஆரோக்கியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடவும், தாய்மையடையவும் நவீன மருத்துவம் கைகொடுக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
மனைவியின் சினைமுட்டையும், கணவரின் ஆரோக்கியமான உயிரணுவும் கலக்கும்போது, கருவாகிறது. இதன் வளர்ச்சி நிலைதான் கர்ப்பம். கர்ப்பத் தடை முறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் மூன்று மாதம் முதல் ஆறுமாதம் வரை தொடர்ச்சியாக தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் பெண்கள் இயற்கையாக கர்ப்பமாகிவிடுவார்கள். அப்படி கர்ப்பமாகாவிட்டால் அது குழந்தையின்மை என்று பொருள் கொள்ளப்படுகிறது.
கணவரின் உயிரணு 72 மணி நேரம் வரை பெண் உறுப்பில் உயிருடன் இருக்கும். ஆனால் அதற்கு கருவாக்கும் திறன் 48 மணிநேரமே உண்டு. அதனால் மாதவிலக்கு தொடங்கிய 14 முதல் 18 நாட்களில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் மாதவிலக்கு ஆரம்பித்த 14-வது நாளில் பூரணத்துவம் பெற்ற சினைமுட்டை வெடித்து வெளியேறி உயிரணுவை சந்திக்க வெளியே வரும். அதனால் அந்த நாளில் தாம்பத்தியம் வைப்பது கருத்தரிப்பை பிரகாசமாக்கும்.
அப்படி நடக்காத பட்சத்தில் குழந்தையின்மை நிலை தோன்றுகிறது. குழந்தையின்மைக்கு கணவன்-மனைவி யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ காரணமாக இருக்கலாம். சினைப்பை பிரச்சினை, சினைமுட்டை வெளியேறுவதில் ஏற்படும் சிக்கல்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகள், கருக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் என்டோமெட்ரியாசிஸ் கோளாறு போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கான குழந்தையின்மைக்கான காரணங்கள்.
உயிரணு எண்ணிக்கை குறைவு, அதன் நீந்தும் வேகத்திறன் குறைவு, வெரிகோசிஸ், ஹார்மோன் பிரச்சினைகள், பாலியல் செயல்பாட்டுக் குறைவு போன்ற பல பிரச்சினைகள் ஆண்களுக்கான குறைபாடுகளாக இருக்கின்றன. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு முக்கியம். அதற்குதக்கபடி வாழ்வியல் முறைகளை கடைப் பிடித்து ஆரோக்கியமான தாம்பத்திய உறவை மேற்கொள்ளவேண்டும்.
குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருவது உண்மைதான். அதனைப்பற்றி கவலைப்படாமல் குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து, ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் மூலம், குறிப்பிட்ட வயதில் தாய்மையடைந்து விடுவது நல்லது. தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை கர்ப்பத்துக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கணவன்-மனைவி இருவருமே உடல் நலத்தோடு மனநலனையும் பேணுவது தாய்மைக்கு மிக அவசியம்.