அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?..
14 ஆவணி 2020 வெள்ளி 06:18 | பார்வைகள் : 9380
உங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமா? அதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களா? ஆம், என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாக, தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெரியவர்களாகும்போது “டென்டல் ப்ளுரோசிஸ்” என்னும் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
உங்கள் குழந்தை பருவத்தின் முதல் எட்டு ஆண்டுகளில், அதிகரித்த ப்ளுரைடு வெளிப்பாட்டின் காரணமாக உங்கள் பற்கள் பாதிக்கப்படும் நிலையை ப்ளுரோசிஸ் என்று அடிப்டையில் கூறுகின்றனர். ப்ளுரைடு என்பது ஒரு கனிமம் ஆகும். இது தண்ணீர் மற்றும் மண்ணில் அதிகமாகக் காணப்படும்.
தண்ணீர் அதிக அளவு பருகும் மனிதர்களுக்கு ப்ளுரைடு அளவு இயற்கையாகவே அதிகமான அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு குறைந்த அளவு பற்குழிகள் இருந்ததாகவும் 70 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, டூத்பேஸ்ட், மவுத் வாஷ், குழாய் நீர் மற்றும் இதர பொருட்களில் ப்ளுரைடு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
குழந்தைப் பருவத்தில், பற்கள் உருவாகும் நிலையில், அதிகரித்த ப்ளுரைடு பயன்பாடு, டென்டல் ப்ளுரோசிஸ் அல்லது பற்களில் கோடுகள் உண்டாவது அல்லது பற்களில் திட்டுக்கள் தோன்றுவது போன்றவற்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், 3-6 வயது குழந்தைகள் பெரும்பாலும் ஒரு முழு பிரஷ் அல்லது பாதி பிரஷ் அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
“ப்ளுரைடு என்பது பல அற்புத நன்மைகளைக் கொண்டது, இருந்தாலும் அதனை கவனமாகக் கையாள வேண்டும்”, என்று சிகாகோவில் உள்ள குழந்தைகளுக்கான டென்டிஸ்ட் மேரி ஹேஸ் டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறினார்.
அதிக டூத்பேஸ்ட் பயன்பாட்டால் எத்தனை குழந்தைகளுக்கு பற்களில் பாதிப்பு, திட்டுக்கள், கோடுகள் ஆகியவை இருந்தது என்பது கூறப்படவில்லை என்றாலும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு அரிசிமணி அளவிற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும், 3-6 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும் கூறுகின்றனர்.
மேலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பேஸ்டில் சுவை அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர். அதனால் குழந்தைகள் தங்கள் விருப்பம் போல் டூத்பேஸ்ட் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினா்.
டூத்பேஸ்ட் என்பது ஒரு உணவு அல்ல, விரும்பிய அளவிற்கு உட்கொள்வதற்கு, எனவே, குழந்தைகளின் டூத்பேஸ்ட் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களே என்று கூறி அவர்கள் ஆய்வை நிறைவு செய்தனர்.