ஈரலை கெடுக்கும் மதுப்பழக்கம்
5 தை 2021 செவ்வாய் 06:05 | பார்வைகள் : 8873
ஈரல், மனித உடலில் இன்றியமையாத உறுப்பு. ஜீரணம் உள்பட உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிர்வகிக்கக்கூடிய மிகப்பெரிய செயலை ஈரல் செய்கிறது.
சிறு குடலுக்கு போய் சேரும் உணவு மூலமான கொழுப்பில் இருந்து, தேவையானவற்றை பிரித்தெடுக்க, பித்த ரசம் தேவை. அது ஈரலில் இருந்துதான் கிடைக்கிறது. கொழுப்பு, புரோட்டின், சர்க்கரை போன்றவைகளை ரத்தத்தில் போதுமான அளவு கட்டுப்படுத்தி சீராக்குவதும் ஈரலின் பணிதான். ரத்தத்தில் கலக்கும் தொற்றுகளையும், வைரஸ்களையும் வெளியேற்றவும் ஈரலின் பணி அவசியம். அதனால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சிறப்பாக நடைபெற வேண்டுமானால், ஈரல் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அதிக அளவில் மது அருந்தினால், ஈரல் கெட்டுப்போகும். அதன் மூலம் உடல் முழுவதும் தளர்ந்துவிடும்.
இப்போது நிறையபேர் ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான மதுதான் அதற்கு முக்கிய காரணம்.
மதுவில் எது சரியான அளவு? அளவுக்கு அதிகம் என்று சொல்லப்படுவது என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவது கடினம். ‘அளவுக்கு அதிகம்’ என்ற கணக்கு ஆளுக்கு ஆள் மாறுபடும். பலருக்கு தினமும் 4 ‘பெக்’ என்பது அதிக அளவு. ஆனால் சிலருக்கு ஒரு ‘பெக்’ என்பதே அதிக அளவாகிவிடுகிறது.
தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களாலும் ஈரல் வீங்கியிருப்பதை முதலிலே அறிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் தொடக்கத்தில் லேசாக ஏற்படும் பாதிப்புகளை வெளிப்படுத்திக்கொள்ளாமல் சீரமைத்துக்கொள்ளும் தன்மை ஈரலுக்கு உண்டு. தன்னைத்தானே சுயமாக அது சீரமைத்துக்கொண்டே இருப்பதால், 70 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்படும்போது அது தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவித்து நோய் அறிகுறியாக வெளிப்படுத்தும். ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி எனப்படும் மஞ்சள் காமாலை ஏற்பட்டாலும் ஈரல் வீங்கும்.
ஈரலில் உருவாகும் பித்த ரசம், பித்தப் பை வழியாக வெளியேறும். பித்தப்பையில் கல் உருவாகிவிட்டால், பித்த ரசம் வெளியேற முடியாத நிலை தோன்றும். அதனால் அது ஈரலிலே தங்கிவிடும். தங்குவது தொடரும்போது ஈரல் வீங்கும் சூழல் உருவாகும். சில வகை மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டாலும் ஈரல் பாதிப்படையும்.
‘லிவர் பங்ஷன் டெஸ்ட்’ மூலம் ஈரலின் பாதிப்பையும், எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும். எதனால் பாதித்தது என்பதை கண்டறிய ஈரலை ‘பயோப்சி’ செய்ய வேண்டும். ஈரலில் ஊசியால் குத்தி திசுக்களை எடுத்து ‘பயோப்சி’ செய்வார்கள்.
மதுவால் ஈரல் வீக்கம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மது அருந்துவதை நிறுத்திவிடவேண்டும். மஞ்சள் காமாலையால் ஏற்பட்டிருந்தாலும் மது அருந்தக்கூடாது. ஈரல் வீக்கநோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் பெறவேண்டும். சிகிச்சையால் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, ஈரல் மாற்று சிகிச்சை தேவைப்படும். ஆனால் அது எளிதான காரியமில்லை.
ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பழம், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். புரோட்டின் நிறைந்த பால், முட்டை, பயறு வகைகள் நல்லது.
ஈரல் வீக்கத்தின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
- வாந்தி, குமுட்டல், பசியின்மை.
- திடீரென்று எடை அதிகரித்தல் அல்லது அதிகமாக எடை குறைதல்.
- கண் மற்றும் சருமத்தில் மஞ்சள் நிறம் படர்தல்.
- சிறுநீர் மஞ்சள் நிறமாக தோன்றுதல்.
- ரத்தம் கலந்த கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்.
- திடீரென்று உடலில் சொறி ஏற்படுதல்.
- காலிலோ, பாதங்களிலோ வீக்கம் ஏற்படுதல்.
- தூக்கத்தில் தடை தோன்றுதல்.
- ஆண்களுக்கு தாம்பத்ய ஈர்ப்பு இல்லாமல் இருப்பது.
- பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு தோன்றுதல்.
- அடிவயிற்றில் வீக்கம் ஏற்படுதல்
- ரத்தவாந்தி எடுத்தல்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்!