Paristamil Navigation Paristamil advert login

கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் விஜய்க்கு இல்லை: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் விஜய்க்கு இல்லை: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

29 புரட்டாசி 2025 திங்கள் 07:53 | பார்வைகள் : 101


விஜயிடம், கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இல்லை,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:த.வெ.க., தலைவர் விஜயின் பொறுப்பற்ற தன்மையாலும்; தமிழக அரசின் அலட்சியத்தாலும், 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது, மனதை உலுக்கியுள்ளது. கட்சி ஆரம்பித்தது முதல் இதுநாள் வரை நடந்த ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தில், எவ்வித கட்டுப்பாடும், ஒழுங்கும் இல்லை. பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதுடன், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடத்தியுள்ளனர்.

நம்பி வரும் மக்களை வழிநடத்தும் தலைமை பண்பும், ஆற்றலும் கொண்டவரே உண்மையான தலைவர்; நடிகர் விஜயிடம் கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இல்லை. சமூக அக்கறையின்றி அவரது நடவடிக்கைகள் இருந்து வருகிறது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொது சொத்துக்களை சேதப்படுத்தி, சாலையோர பூங்காவை துவம்சம் செய்தனர். மதுரை மாநாட்டில், குடிநீர் பாட்டில் மற்றும் உணவு பொட்டலங்களை துாக்கி வீசியதால், கட்சியினர் முண்டியடித்து சென்றனர்.

த.வெ.க., தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டாலும் முறைப்படுத்தி வழிநடத்த வேண்டிய விஜய், ஒரு வார்த்தை கூட பேசாதது துரதிஷ்டவசமானது. கரூரில், மதியம் 12:00 மணிக்கு மக்களை சந்திப்பதாக அறிவித்துவிட்டு, இரவு 7:00 மணிக்கு வந்துள்ளார். காலை முதல், குழந்தைகளுடன் காத்திருந்த மக்கள், குடிநீர், உணவு கூட கிடைக்கவில்லை. கட்சியினர், குடிநீர் பாட்டில் மற்றும் உணவுப் பொட்டலத்தை தூக்கி வீசியதால், அதைப்பெற முண்டியத்து சென்றபோது, நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள் உட்பட, 40 பேர் பலியாகிய பெருந்துயரம் நடந்துள்ளது.

மற்ற கட்சிகள், எப்படி பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் என்று முதலில் கற்றுக்கொண்டு, பிறகு கூட்டம் நடத்த வேண்டும்.அனுமதி வழங்கிய நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கும், போலீசுக்கும் உள்ளது.

அரசியல் பாலபாடம் கூட அறியாத விஜய், முதலில் அரசியலை கற்றுக் கொண்டு, தலைமை பண்பை வளர்த்துக் கொண்ட பிறகு அரசியலில் ஈடுபடுவதுதான், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பானது.

தமிழக அரசு, துவேஷ அரசியலை கைவிட்டு, மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்பட வேண்டும்; எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்கா தவாறு பாதுகாப்புடன் நடத்த வேண்டிய கடமை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. மக்கள் உயிரோடு விளையாடாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித் துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்