Paristamil Navigation Paristamil advert login

கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப கூடாது: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப கூடாது: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

30 புரட்டாசி 2025 செவ்வாய் 05:05 | பார்வைகள் : 100


கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கரூரில் நடந்தது பெரும் துயரம். கொடும் துயரம், இதுவரை நடக்காத துயரம். இனி நடக்க கூடாத துயரம். மருத்துவமனையில் நான் நேரில் சென்ற காட்சி இன்னும் என் கண்ணை விட்டு அகழவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும் தான் நான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்த உடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்டு, எல்லா உத்தரவுகளை பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே அன்றைக்கு இரவே கரூருக்கு போனேன்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதனை உடனடியாக வழங்கி கொண்டு இருக்கிறோம். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம். நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை அறிய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

வதந்திகளை தவிருங்கள்

இதற்கிடையே சோஷியல் மீடியாவில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

விதிமுறைகள்

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது, இனி வரும் காலங்களில் எத்தகைய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நமது எல்லோருடைய கடமை. எனவே நீதிபதி ஆணையம் கிடைத்த பிறகு எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்.

நாட்டிற்கே முன்னோடி

மனித உயிர்களே எல்லாவற்றிக்கும் மேலானது, மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனி மனித பகைகள் என்று எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லோரும் மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழகம் எப்பொழுதும் நாட்டிற்கே முன்னோடியாக தான் இருந்து இருக்கிறது. இது போன்று நினைவுகள் எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நமது எல்லோருடைய கடமை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்