கட்சிகளின் பிரசாரம், பொதுக்கூட்டங்களுக்கு...வருகிறது கட்டுப்பாடு! :முதல்வர் ஸ்டாலின் உறுதி

30 புரட்டாசி 2025 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 101
கரூர் துயர சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, அரசியல் கட்சிகளின் பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கும், பொது அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. கரூர் சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையம் அறிக்கை அளித்த பின், விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர்.
இச்சம்பவத்திற்கு, எதிர்பார்க்காத அளவிற்கு அதிக கூட்டம் கூடியது, போலீசாரின் மெத்தனம், விஜயின் காலதாமதமான வருகை, பிரசார வியூகத்தில் செய்த குழப்பம், திட்டமிட்ட சதி என, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
விமர்சனம்
இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பலர் அரசை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். இச்சூழலில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:
கரூரில் நடந்த சம்பவத்திற்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய்வதற்கு, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆணையத்தின் அறிக்கையின்படி, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இதற்கிடையில், சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகிற வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும், தன் தொண் டர்களும், அப்பாவி பொது மக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்.
எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த சூழ்நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது, இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது, நம் எல்லாருடைய கடமை.
நெறிமுறைகள்
எனவே, ஒரு நபர் ஆணைய அறிக்கை கிடைத்த பின், அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும்.
அத்தகைய நெறி முறைகளுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தருவர் என்று நம்புகிறேன்.
மனித உயிர்கள், எல்லாவற்றுக்கும் மேலானவை; மானுட பற்று அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனி மனித பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லாரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்.
தமிழகம் எப்போதும் நாட்டிற்கு பல வகைகளில் முன்னோடியாகத் தான் இருந்திருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள், இனி எந்த காலத்திலேயும் நடக்காமல் தடுக்க வேண்டியது, எல்லாருடைய கடமை. இவ்வாறு வீடியோ பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1