Paristamil Navigation Paristamil advert login

தேனின் மருத்துவ பயன்பாடு

தேனின் மருத்துவ பயன்பாடு

28 மார்கழி 2018 வெள்ளி 09:20 | பார்வைகள் : 9327


 மலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது.

 
தேனீ தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலம் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது. நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூர்வ எகிப்திய கல்லறைகளை அகற்றிய போது, தேன் பானைகள் காணப்பட்டுள்ளன.
 
 
அதில் இருந்த தேன் நீண்ட காலமாக பாதுகாக்கபட்டவை என்றும், அது எந்த தன்மையும் மாறாமல் இருப்பதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதன் அமிலத்தன்மை, தண்ணீர் இல்லாமை மற்றும் தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு தன்மை போன்றவற்றின் சிறந்த கலவையே தேனை பல நூறு வருடங்களுக்கு கெடாமலும், மருத்துவத் தன்மை நிறைந்ததாகவும் வைத்திருக்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புத்தன்மை கொண்ட தேனை காலவரையின்றி நம்மால் பயன்படுத்த முடியும்.
 
சுத்தமான தேன் எளிதில் செரிக்க கூடியது. அதிக சத்து நிறைந்தது. தேனின் ரசாயனக் கலவை, அதன் சுவை, காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தில் தேன் மிக முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.
 
தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது. தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. அதில் மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தோன்றும், அவையும் எளிதில் இறந்துவிடும்.
 
தேன் பல நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதால், எந்தவிதமான நுண்ணுயிர் வளர்ச்சியையும் நிராகரிக்கிறது.
 
காயம் அல்லது தீக்காயத்தை குணமாக்க தேன் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தினர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால் தான் தேனுடன் மற்ற மருந்தை சாப்பிட கொடுக்கிறார்கள் .
 
இத்தகைய அழியாத் தன்மையுடைய அமிர்தமான தேனை நாமும் பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமானால், தேன் நிறைந்த ஜாடியை இறுக்கமாக மூடி அலமாரியில் வைத்தாலே போதும். இயற்கையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை தேனும், தேனீக்களும் நமக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்