Paristamil Navigation Paristamil advert login

உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்

உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்

7 மார்கழி 2018 வெள்ளி 10:18 | பார்வைகள் : 8843


 ‘ஏன் என்றே தெரியவில்லை. நான் எடை கூடிக்கொண்டே செல்கிறேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. சிலர் ஏதேனும் விபத்து காரணமாக சில காலம் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் பொழுது எடை கூடுவது இயற்கைதான். இவர்களைக்கூட எடை கூடாத சத்துணவு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவம் அறிவுறுத்தும். சிலர் அதிக மன உளைச்சல் காரணமாக முறையற்ற உணவினை உட்கொண்டு எடை கூடுவர். இதனையும் முறையான கவனம் செலுத்தி மன நலம் மூலமாக உடல் நலம் பெற வேண்டும்.

 
சில மருந்துகள் மற்றும் மருத்துவ காரணங்களாலும் எடை கூடலாம். காரணம் எதுவாயினும் அதிக எடை என்பது கீழ்கண்ட நோய்களின் அடித்தளம் ஆகிவிடும்.
 
 
• இதய நோய்கள்    • சர்க்கரை நோய் பிரிவு 2
• மூட்டு பிரச்சினை    • எலும்பு பிரச்சினை
• உயர் ரத்த அழுத்தம்    • சில வகை புற்று நோய்கள்
• மன உளைச்சல்    • பக்க வாதம்
 
• அதிக கொழுப்பு ஆகியவை அனைத்துமே பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்தான் உடல் கூடுதல் எடைக்கு செல்லாமல் இருக்க மிக அதிக கவனம் கொடுக்க வேண்டி உள்ளது.
 
• சரியாக தைராய்டு சுரப்பி வேலை செய்யாது தைராய்டு குறைபாடு இருப்பின் திடீரென அதிக எடை கூடலாம்.
 
• மிக அதிகமான கலோரிகளை உட்கொள்வது, அதாவது மிக அதிகமாக சாப்பிடுவது எடை கூடுதலை ஏற்படுத்தும்.
 
• பலர் தாகம் எடுக்கும் பொழுது அதனை பசி என நினைத்து உணவு உட்கொள்வர். ஆக உடலுக்கு தேவையான  அளவு நீர் கிடைக்காத பொழுது உடல் நீரினை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்யும். இதனால் நீர் தேங்கி உப்பிசம் ஏற்படும். எனவே முறையாக அளவாக நீர் குடிக்கும் வழக்கத்தினை பின்பற்றுங்கள்.
 
• நான் சரியாக உண்கிறேன். தேவையான அளவு தூங்குகிறேன். நன்கு உடற்பயிற்சி செய்கிறேன். இருப்பினும் அதிக எடை கூடுகின்றது என்பவர்களும் உண்டு. இவர்களுக்கு அதிக மன அழுத்தம், மன உளைச்சல் இருக்கலாம். இந்த பாதிப்பு உடையவர்களுக்கு கார்டிஸால் ஹார்மோன் அதிகம் சுரந்து அதன் மூலம் இன்சுலின் அளவு கூடி ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது பிஸ்கட், ஐஸ்கிரீம் என உண்ணத் தொடங்குவார்கள். இதனால் கண்டிப்பாய் எடை கூடும். இத்தகையோருக்கு மூச்சுப் பயிற்சி செய்வது, கிரீன் டீ எடுத்துக் கொள்வது போன்றவை பேருதவியாய் இருக்கும்.
 
 
 
• சிலருக்கு எதிலும் அதிக உப்பு தேவையாய் இருக்கும். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி இருக்கும். அதிக உப்பினை குறைத்தால் போதும். உப்பே இல்லாமல் இருப்பதும் பெரும் தவறு. ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப்படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவற்றினைத் தவிருங்கள் என்பதுதான்.
 
• கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சில காலம் பயன்படுத்துவது எடை கூடுதலை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகள் ஹார்மோன் சம்பந்தப்பட்டவை என்பதால் அதிக பசியினைத் தூண்டும். நீரினை உடலில் தேக்கும். இதனால் உடல் எடை கூடும். குறைந்த ஹார்மோன் கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவத்தில் உள்ளன. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
* அதிக புரதம் கூடாது என்றாலும் அநேகர் தேவையான அளவு புரதமே எடுத்துக்கொள்வதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. புரதம் உடலுக்கு இன்றியமையாத ஒரு சத்து. புரதம் இன்மை உடலின் செயல்திறனை குறைத்து விடும். உடல் உப்பியதுபோல் இருக்கும்.
 
* மனச்சோர்வு, கவலை இவை ஒருவரை செயல் இன்றி முடக்கிவிடும். இவர்கள் இவர்களை அறியாமலே அதிக உணவு உட்கொள்வர். இதனால் எடை கூடுதல் வெகு எளிதில் ஏற்படும். மனநலனை யோகா, மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி  இவற்றின் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும். 
 
* ஆரோக்கியமான உணவினை உண்ணாமல் கொழுப்பு உணவு, ஆரோக்கியமற்ற கலோரி சத்து மிகுந்த உணவு போன்றவை எடையினை கூட்டிக்கொண்டே போகும். இவைகளை தவிர்த்து விகிதாசார ஆரோக்கிய உணவினை உண்பது உங்கள் எடையினைக் குறைக்கும்.
 
* மிக அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதுவும் உங்களை மிக அதிகமாக சாப்பிடத் தூண்டும். எதிலும் நிதான அளவுகோலே சிறந்தது.
 
* தேவையான அளவு அதாவது 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் உடலை எடை கூடாமல் இருக்கச்செய்யும்.
 
மேற்கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை கூடாது இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்