முகப்பரு, இளநரைக்கு சிகிச்சை
9 ஆடி 2019 செவ்வாய் 08:32 | பார்வைகள் : 9600
மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.
இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’
உங்கள் செல்ல மகளின் பெரிய பெரிய ஆசைகளில் பரு இல்லாத முகமும் ஒன்றுதானே.. நீங்களும்தான் மார்க்கெட்டில் அறிமுகமாகிற எல்லா க்ரீம்களையும் போட்டுப் பார்த்துவிட்டீர்கள். அப்படியும் பரு இன்னும் அதிகரித்திருப்பது மாதிரிதான் தோன்றுகிறதே தவிர, ஒருபலனும் இல்லை என்றா கவலைப்படுகிறீர்கள்?
‘‘கவலைவேண்டாம்.. அதற்கும் எளிய சிகிச்சை ஒன்று இருக்கிறது.
‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.
பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.
‘என்னால் இவ்வளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.
ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.