என்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை
22 ஆனி 2019 சனி 11:23 | பார்வைகள் : 3125
மழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமை பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக நிறைய ‘கிரீம்’களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பது இல்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கு உணவு, உடற்பயிற்சிகளால் தீர்வு காண முடியும். நல்ல ஆரோக்கியமான, இளமை தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடல் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ உள்ளிட்ட சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடன் இருக்கலாம்.
கோடைகாலத்தில் மாம்பழம் மலிவாக கிடைக்கும். இது சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். கீரையையும் சாப்பிட்டு வந்தால், இளமையுடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில் சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் சத்துகளும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.
பச்சை இலை காய்கறிகள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும். குடைமிளகாய் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் ‘லைகோபைன்’ என்ற சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ உள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்த பழங்களை சாப்பிட்டால், வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.
‘நடந்தால் நாடும் உறவாகும்
படுத்தால் பாயும் பகையாகும்‘
-என்ற பொன்மொழிக்கு இணங்க உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற இயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமம் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.