கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை பொடி
12 தை 2018 வெள்ளி 09:55 | பார்வைகள் : 10662
அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில் தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது. முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுப்பதே சிறந்தது.
செம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால், வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தலைக்கு மசாஜ் செய்வதுவந்தால், மன அழுத்தம் குறையும். தினமும் தலைக்குப் பாதாம் எண்ணெய் தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.
பாதாம் எண்ணெய் நன்றாக முடி வளர உதவும். இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது. உடல்வாகைப் பொறுத்து, ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மாறுபடும். பல்வேறு கூந்தல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை கூந்தல் அலசும் பொடியை வீட்டிலேயே தயார் செய்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை பயன்படுத்தி வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.
சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம் தலா 100 கிராம், செம்பருத்தி இலை, வேப்பிலை தலா 20 ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை அலசலாம்.
ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறைக் கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனர்.
பலன்கள்: முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டும். கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.