எப்போதும் இளமையாக இருக்க வழிகள்
8 தை 2018 திங்கள் 08:29 | பார்வைகள் : 10362
எப்போதும் இளமையாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இருந்தாலும், வயதாகும் போது ஏற்படும் தோல் சுருக்கம் முதுமையை வெளிக்காட்டிவிடும். குறிப்பாக முகத்தில் தோன்றும் மாற்றங்கள் உங்கள் வயதை காட்டிக் கொடுத்துவிடும்.
இதனால் முக அழகை பராமரிக்கவும், பாதுகாக்கவும் எண்ணற்ற மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் போட்டி போட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. விஞ்ஞானிகளும் மனிதர்களின் இளமையை நீடிக்கச்செய்யும் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி முராத் ஆலம், யோகா நிபுணர் கேரி சிகோர்ஷி ஆகியோர் கொண்ட குழுவினர் வசீகரமான முக அழகை பாதுகாப்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட சில யோகாசனங்கள் செய்வதன் மூலம் முக அழகை இளமையாக வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி ஆலம் இதுகுறித்து கூறுகையில், ‘தினமும் 30 நிமிட நேரம் முகத்திற்கான யோகப்பயிற்சிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் சுருக்கம் விழுவது தள்ளிப்போகும். சுமார் 40 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் ஆகியோர் கொண்ட 50 பேர் குழுவை இதற்காக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முக யோகாசனம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இதை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். அதுபோல யோகாசனம் எதுவும் செய்யாத குழுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் யோகாசனம் செய்தவர்கள் முக அழகு நீடித்து இருப்பதும், அவர்களது முகம் பொலிவுடன் இருப்பதும் தெரியவந்தது’ என்றார்.
இந்த சோதனைக்காக சில குறிப்பிட்ட யோகாசனங்களை யோகா நிபுணர் கேரி உருவாக்கியுள்ளார். இந்த யோகாசனங்களில் பல, முகத்தைஅஷ்டகோணலாக்கி பயிற்சி செய்வது போல அமைந்துள்ளது. இதை பலரும் ஆர்வத்துடன் செய்கிறார்கள். மேலும் இந்த யோகா செய்யும் போது அவர்கள் அதிகமாக சிரித்துக்கொள்வதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்கிறார் யோகா நிபுணர் கேரி.