குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள்
13 ஆவணி 2018 திங்கள் 14:01 | பார்வைகள் : 9170
கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.
இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
* உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
* ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
* தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
நடக்கிறதா?
* உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
* பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
* சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
* உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?
மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டியவை கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.
அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.