பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்
20 ஐப்பசி 2017 வெள்ளி 09:35 | பார்வைகள் : 10643
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். கடினமாக உடலால் உழைப்பவர்கள் 10 மணி நேரமும், மற்றவர்கள் 6 முதல் 8 மணி நேரம் வரை உறங்கினால் போதுமானது. ஆனால், இன்றைய காலத்தில் நிம்மதியான உறக்கம் என்பது கடிமான ஒன்றாகி விட்டது.
தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று. ஆனால், போதுமான அளவு உறங்க அவர்களுக்கு நேரமில்லாமலும், சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதிப்படுகிறார்கள். தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வேலைக்கு செல்லும் பெண்களை தூக்கமின்மை பெரிதும் பாதிக்கிறது. இன்றைய பரபரப்பான சூழலில் ஓடக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தூக்கம் என்பது கனவாக மாறிக் கொண்டிருக்கிறது. தூங்க நேரம் இல்லாமல் பயண நேரத்தில் தூங்குபவர்களையும் பார்க்க முடிகிறது. தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
எல்லா காலத்திலும் பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை வீட்டு வேலை அலுவலக வேலை என அனைத்தையும் செய்வதிலேயே அவர்களது நேரம் முழுவதும் செலவிடப்படுகிறது. இதனால் பெண்களின் தூங்கும் நேரமானது குறைந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அவர்கள் அறிவதில்லை.
இன்று வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பதே கிடைப்பதில்லை. விடுமுறை நாட்களிலும் அவர்களது வேலைக்கு விடுமுறை என்பதே கிடையாது. அவர்களது வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டாலும், அவர்களுக்கு அதிக வேலை இருக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். நேரம் தவறி தாமதமாக சாப்பிடுவதும், சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இரவு நேரப் பணியில் ஈடுபடுவதும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். பகலில் வேலைகளில் ஈடுபடுவதும், இரவில் உறங்குவதுமே நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்று. இதை மாற்றி, பகலில் உறங்குவது, இரவில் பணிகளில் ஈடுபடுவதை நம் மனம் ஏற்றுக் கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகமாகவும், பகலில் குறைவாகவும் சுரக்கும்.
எனவே, தூக்க நேரத்தை தலைகீழாக மாற்றினால் உடல்நல மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான பதிப்பிற்குள்ளாகிறார்கள்.
தூக்கமின்மை பிரச்சனையின் ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, தீராத ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் சுழற்சிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்சனைக்கு வித்திடும். இதில் கவனம் எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறிது காலத்திலேயே இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு என பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பெண்கள் தூக்கமின்மையை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருப்பதே, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மையை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், மருத்துவ ஆலோசனையை பெறுவதன் மூலம் இவற்றை தவிர்க்க முடியும்.