புருவத்தை அடர்த்தியாக்க இயற்கை வழிகள்
30 புரட்டாசி 2017 சனி 10:24 | பார்வைகள் : 10797
சிலருக்கு புருவ முடிகள் உதிரும் பிரச்சனை இருக்கும். இது தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம், புரதம் அல்லது வைட்டமின் குறைபாடு போன்றவற்றாலும் புருவ முடி உதிர்தல் ஏற்படலாம். இயற்கை வழிகளை பின்பற்றி மெல்லிய புருவத்தை அடர்த்தியாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
புருவ முடியை அடர்த்தியாக மற்றும் விரைவாக வளர செய்ய பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருவது விளக்கெண்ணெய். இது வேர்க்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஒரு பஞ்சை எடுத்து விளக்கெண்ணெயில் நனைத்து, புருவத்தில் தடவவும். விரல் நுனியை கொண்டு 2-3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் விடவும். பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். குறிப்பாக இரவு படுப்பதற்கு முன் இதனை செய்யலாம்.
இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். சில மாதங்கள் தொடர்ந்து இதனை செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.
ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து புருவத்தில் தடவவும். நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விடலாம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ஆலிவ் எண்ணெயுடன் தேன் சேர்த்து புருவத்தில் தடவலாம். நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம். தினமும் இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.