Paristamil Navigation Paristamil advert login

ஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி?

ஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி?

25 புரட்டாசி 2017 திங்கள் 10:10 | பார்வைகள் : 9265


 மென்மையான, பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.

 
கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள் புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல், வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
 
கூந்தல் உள்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
 
உடலுக்கு நல்ல கொழுப்புச் சத்து தேவை. இவை கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.
 
 
 
மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, முட்டைகோஸ், கேரட்டில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது. நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெரி, அன்னாசி, தக்காளி, குடை மிளகாய் மற்றும் கீரை வகைகளில் வைட்டமின் சி சத்து உள்ளது. அவை கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
 
ஆலிவ் ஆயில், சோயா பீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
 
கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் பயோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கரு, அரிசி மற்றும் பால்பொருட்களில் பயோட்டின் நிறைந்துள்ளது.
 
டீ, காபி மற்றும் மது அருந்துவது உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ, காபி குடிப்பவர்கள் தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகளை குடிக்கலாம். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்