சனாதனம் பற்றி மம்தா பானர்ஜி கூறுவது என்ன?
6 புரட்டாசி 2023 புதன் 06:49 | பார்வைகள் : 4608
தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சுக்கு அமைதி காத்து வந்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதுபற்றி முதன்முறையாக பேசியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டு படிக்கட்டை தாண்ட கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம் என்று பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தியது. இந்த நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை புண்படுத்த கூடிய எந்தவொரு விசயத்துடனும் நாம் தொடர்புப்படுத்தி கொள்ள கூடாது என கூறியுள்ளார்.
அவருடைய (உதயநிதி ஸ்டாலின்) பேச்சுகளை கவனத்தில் கொள்ளும்போது, அவர் இளையவர். இந்த கருத்துகளை ஏன் மற்றும் எந்த சூழலில் அவர் கூறினார் என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை.
ஒவ்வொரு மதமும் சமஅளவில் மதிக்கப்பட வேண்டும் என நான் உணர்கிறேன் என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நான் தமிழக மக்களை, தென்னிந்தியாவை மதிக்கிறேன். ஆனால், அவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால், அனைவரையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் தனியான உணர்வுகள் உள்ளன என கூறியுள்ளார்.
சனாதன தர்மம் மீது எனக்கு மதிப்பு உண்டு. நாம் வேதங்களில் இருந்து கற்று கொள்கிறோம். நம்மிடம் நிறைய புரோகிதர்கள் உள்ளனர். எங்களுடைய மாநில அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நாடு முழுவதும் எண்ணற்ற கோவில்கள் நமக்கு உள்ளன. நாம் கோவில்களுக்கும், மசூதிகளுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் செல்கிறோம் என அவர் கூறியுள்ளார். இதேபோன்று அவருடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறும்போது, பிற மதங்களை நாம் மதிக்க வேண்டும். இந்த கருத்துகளுக்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இந்த சர்ச்சையில் இருந்து விலகி கொண்டன. இதனால், இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையற்ற நிலை காணப்படுகிறது. ஒற்றுமையை பாதுகாக்க ராஜதந்திர பணிகளில் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.