50 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு அருகில் காட்சியளிக்கும் வியாழன்
27 புரட்டாசி 2022 செவ்வாய் 07:19 | பார்வைகள் : 5411
நாம் வாழும் இந்த சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எதுவென்றால் அது வியாழன் தான். பூமியில் இருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ராட்சத கோளை நம்மால் வெறுங்கண்ணால் கூட பார்க்க முடியும். அந்த அளவுக்கு மிகப்பெரிய கோள் வியாழன். நமது பூமியைப் போல 1,300 மடங்கு பெரியது இந்த வியாழன்.
இந்த வியாழன் கோள் பொதுவாக 96.5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இன்று பூமிக்கு மிக அருகே அதாவது 59 கோடி கிலோ மீட்டர் தொலைவில் வரவுள்ளது. இதனால் வழக்கத்தை விட பூமியில் இருந்து பார்ப்பதற்கு சற்று பெரிய அளவிலும் பிரகாசமாகவும் வியாழன் கிரகம் தோன்ற உள்ளது. இன்று மாலை மேற்கு திசையில் சூரியன் மறையும்போது, கிழக்குத் திசையில் இந்த அரிய வானியல் நிகழ்வு நிகழ உள்ளது.
இதற்கு முன்னதாக 1963 ஆம் ஆண்டு இதே போன்று பூமிக்கு மிக அருகில் வந்து, அளவில் பெரியதாக தெரியும் இந்த அரிய வானியல் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் 59 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று இந்த வானியல் நிகழ்வு அரங்கேற உள்ளது. தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த நிகழ்வை மிகத் தெளிவாக பார்க்கலாம் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கும்போது வியாழனுக்கு இருக்கும் 79 துணைக்கோள்களில் 1610 ஆம் ஆண்டு கலிலியோ முதன்முதலாக கண்டுபிடித்த அயோ, யூரோபா, கேனிமீட் மற்றும் கலிஸ்டோ ஆகிய 4 கலிலியன் துணைக் கோள்களையும் தெளிவாகக் கண்டு ரசிக்கலாம் என்று நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் ஆராய்ச்சி வானியற்பியல் நிபுணர் ஆடம் கோபெல்ஸ்கி கூறினார்.