Paristamil Navigation Paristamil advert login

விண்வெளிக்கு டூர் போகும் முதல் பணக்காரர்!

விண்வெளிக்கு டூர் போகும் முதல் பணக்காரர்!

5 மாசி 2021 வெள்ளி 09:36 | பார்வைகள் : 9254


விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பயணம் செய்ய உள்ள முதல் நபரை எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்அறிவித்துள்ளது.

 
விண்வெளியில் சாதாரண மனிதர்கள் வலம் வருவது என்பது இதுவரை வெறும் கனவாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
’இன்ஸ்பிரேஷன் 4’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயணம் செய்யும் முதல் நபராக ஜாரெட் ஐசக்மேன் என்ற அமெரிக்க கோடீசுவரரை அறிவித்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். Shift4 Payment நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாரெட் ஐசக்மேன் தான் பயணம் செய்யும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை வாங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு பூமியை சுற்றி வர தன்னுடன் மூன்று நபர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
 
சக பயணிகளில் ஒருவராக செயின்ட் ஜூட் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண் சுகாதார பணியாளரை ஏற்கனவே தேர்வு செய்துள்ளார். பிப்ரவரி மாதத்தில் செயின்ட் ஜூட் மருத்துவமனைக்கு அதிக நன்கொடை அளிக்கும் நபரை மூன்றாவது பயணியாக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். விண்வெளியில் பயணம் செய்ய உள்ள நான்கு பேரும் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9 மற்றும் டிராகன் விண்கலத்தில் தேவையான தயார்நிலை பயிற்சியைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பயிற்சி பெற்ற நான்கு பேரும் பூமியை வலம் வர திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 7 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மேலும் விண்வெளியில் இருந்து கணிசமான அளவு பொருட்களை பூமிக்கு திருப்பி கொண்டு வரும் திறன் கொண்டது. விண்வெளி வீரர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை இந்த ’டிராகன்’ விண்கலம் பெறும்.
 
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த இன்ஸ்பிரேஷன் 4 திட்டத்தின் வாயிலாக திரட்டப்படும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி டென்னசியில் உள்ள செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்று ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
 
உலகின் இரண்டாவது பணக்காரர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான விண்வெளி நிறுவனம் ப்ளூ ஆரிஜின் தனது புதிய ஷெப்பர்ட் விண்கலத்தில் வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்ல போவதாக சமீபத்தில் கூறியது. இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அவசர அறிவிப்பு வந்துள்ளது.
 
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான எலன் மஸ்க்கிற்கும், ஜெப் பெசோஸுக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், விண்வெளியில் பறப்பதற்கும் தங்களது திட்டத்தினை போட்டியாக அறிவித்துள்ளனர். இவர்களில் யார் முதலில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்ல போகிறார்கள் என்பதை உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்