SN9 ராக்கெட் விண்ணில் செல்ல அனுமதி மறுப்பு!
30 தை 2021 சனி 06:55 | பார்வைகள் : 9920
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் SN9 ராக்கெட் விண்ணில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் FAA நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால் அதிருப்தி அடைந்தார் எலன் மஸ்க்.
உலகின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க், அண்மையில் அமேசான் நிறுவதின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 பணக்காரராக அவதாரம் எடுத்தார். எலன் மஸ்க் , பல துறைகளில் தற்போது அசத்தி வருகிறார். மின்சார கார் முதல் விண்வெளி பயணம் வரை பல துறைகளில் கால் பதித்து வெற்றி கண்டுள்ளார் எலன் மஸ்க் .
எலன் மஸ்கின் மிக பெரிய கனவுத்திட்டமாக பார்க்கப்படுவது, செவ்வாய் கிரக பயணம் தான். பல நூற்றாண்டுகளுக்கு முன் டைனோசர் இனம் அழிந்தது போல, வரும் காலகட்டங்களில் , அணுசக்தி போரினாலோ, விண்கல் தாக்கியோ மனித இனம் அழிந்து போக வாய்ப்புள்ளது. இதனால், செவ்வாய்க்கிரகத்தில் ஒரு நகரம் அமைக்க தனது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் மூலம் அயராது உழைத்து வருகிறார் எலன் மஸ்க்.இதற்காக, செவ்வாய்க்கிரகத்தில் ஆய்வு மேற்கோள் ராக்கெட் அனுப்ப ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. எலன் மஸ்க்கின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் SN9 ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை ஒட்டத்துக்கு ,அமெரிக்காவின், பெடரல் ஏவியேஷன் நிறுவனமான FAA அனுமதி மறுத்துள்ளது.
எரிபொருள் நிரப்பப்பட்டு, டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ராக்கெட் ஏவும் தளத்தில், விண்ணில் செல்ல தயார் நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென, FAA நிறுவனம் , ஸ்டர்ஷிப் ராக்கெட்டை விண்ணில் செலுத்த தடை விதித்தது. கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்ட தடையால், பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
ஸ்டர்ஷிப் ராக்கெட்டில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவில்லை என்று கூறி FAA நிறுவனம் அந்த ராக்கெட்டிற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எலன் மஸ்க் , தன் ட்விட்டர் பக்கத்தில் , 'FAA நிறுவதன் விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதாக விமர்சித்த மஸ்க் , இந்த நிலை தொடர்ந்தால் , மனித இனம் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லவே முடியாது' என்று விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்திய SN8 ராக்கெட் , பூமியில் தரையிறங்கியபோது இயந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.