சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் நாசா!
31 வைகாசி 2021 திங்கள் 12:51 | பார்வைகள் : 9639
1 மி.மீ மட்டுமே அளவு கொண்டுள்ள நீர்க் கரடிகள் எவ்வாறு பூமியில் அதிக அழுத்தம், வெப்பநிலை மற்றும் கதிரியக்கம் போன்ற சவாலான சூழல்களில் வளர்கிறது என்பதையும், விண்வெளி சூழலில் அது எவ்வாறு வாழும் என்பதையும் ஆராய்ச்சி செய்ய உள்ளனர்.
ஜூன் 3ம் தேதி அன்று, இருளில் ஒளிரும் ஸ்கிவிட் மீன்கள் (glow-in-the-dark baby squids) 128-ஐயும், 5000 பாசிப் பன்றி என வழங்கப்படும் நீர்க்கரடிகளையும் நாசா, ஆராய்ச்சிக்காக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப உள்ளது.
இந்த நீர் உயிரினங்கள் ஸ்பேஸ் எக்ஸின் 22வது கார்கோ ரிசப்ளை மிஷன் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நீர் உயிரினங்கள் நீண்ட காலத்திற்கு விண்ணில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள செல்லும் விண்வெளி வீரர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வடிவமைக்க விஞ்ஞானிகளுக்கு உதவும் சோதனைகளின் ஒரு பகுதியாகும்.
பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நீண்ட காலத்திற்கு சுற்றி வரும் விண்வெளி நிலையம் ஒரு மிகப்பெரிய விண்கலமாகும். இது கிட்டத்தட்ட வானில் செயல்படும் ஒரு ஆராய்ச்சி நிலையம் ஆகும். இங்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வந்து வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் தங்கி மைக்ரோ கிராவிட்டி சோதனைகளை மேற்கொள்ள உதவுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் 1998ம் ஆண்டில் இருந்து விண்வெளியில் உள்ளது. நாசா(அமெரிக்கா) , ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்யா), ஜாக்ஸா (ஜப்பான்), ஈ.எஸ்.ஏ (ஐரோப்பா), சி.எஸ்.ஏ (கனடா) என ஐந்து நாடுகளின் விண்வெளி நிலைய ஆராய்ச்சி மையத்தின் ஒத்துழைப்பால் இயங்கி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில், மனிதர்கள் தொடர்ச்சியாக அங்கே வாழ்ந்து வந்து, 150 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அறிவியல் ஆராய்ச்சிகளை மைக்ரோ கிராவிட்டி சூழலில் நடத்தியுள்ளனர். பூமியில் சாத்தியமில்லாத ஆராய்ச்சியில் முன்னேற்றங்களை இங்கே காண முடிந்தது.
இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 3000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளை 108 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது. உயிரியல், மனித உடலியல் மற்றும் இயற்பியல், பொருள் மற்றும் விண்வெளி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது.