செவ்வாய் கிரகத்தில் அதிசயங்களை நிகழ்த்திய ரோவர் விண்கலம் செயலிழப்பு
14 மாசி 2019 வியாழன் 16:35 | பார்வைகள் : 8754
செவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிழந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, நாசா பிரியாவிடை உத்தியோக பூர்வமாக ஓய்வு கொடுத்துள்ளது.
வெறும் 90 நாட்கள் மட்டுமே ஆயுட்காலத்தைக் கொண்ட ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் 2003 ஜூன் மாதம் அனுப்பப்பட்டு, 2004 ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடைந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரோவர் தனது சேவையை 15 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
சிவப்பு கிரகமான செவ்வாயை, 10 கோடி மைல்களுக்கு அப்பால் பூமியில் இருந்து தினமும் விஞ்ஞானிகள் அறிகின்றனர். கடந்த 15 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட ரோவர், செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது.
செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்பதை பார்க்கவே இந்த ரோவரை அனுப்பினார்கள். இதன் ஆயுட்காலம் அப்போது 90 நாட்கள் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் 90 நாட்களில், செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை எல்லாம் திரட்டி, நாசாவிற்கு அந்த அனுப்பியது.
இந்நிலையில் பயங்கர புழுதிபுயல் காரணமாக முக்கியமான கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரோவர் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் தொடர்பை இழந்ததில் இருந்து ரோபோ காணாமல் போனதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விண்வெளி ஆராய்ச்சியின் வரலாற்றில் மிகவும் பயனுள்ள செயல்திட்டங்களில் ஒன்றாக இருந்தது ரோவர்.
அதன் பேட்டரிகள் செயல் இழந்து விட்டது.இதனால் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான செய்திகளுக்கு சில மாதங்களாக அதனிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.
இதனால் இந்த ரோவர் திட்டம் முடிவடைந்ததாக நாசாவின் அறிவியல் மிஷன் இணை நிர்வாகி தாம்ஸ் ஷுர்புஜன் அறிவித்து உள்ளார்.
கலிபோர்னியா, பசடேனாவில் உள்ள தலைமையகத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இத் திட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
அரிசோனா மாநில பல்கலைக்கழக செவ்வாய் கிரக ஆராய்ச்சி இயக்குனர் தியானா ஹாரிசன் தனது டுவிட்டரில், அது அமைதியானது, இது கண்ணீர் நிறைந்தது.அது எங்களுடன் பின்னி பிணைந்து இருந்தது. அது நினைவுகளையும் சிரிப்பையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டது. #ThankYouOppy #GoodnightOppy, "என்று அவர் கூறி உள்ளார்.
ரோவரானது சுமார் 45.2 கிலோமீட்டர் பயணம் செய்து, 217,594 புகைப்படங்கள் பூமிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.