விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்!
13 தை 2019 ஞாயிறு 08:30 | பார்வைகள் : 9280
150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளனர்.
கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிகச்சரியாக என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லையேன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்பத் திரும்ப வந்துள்ளது.
ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீற்றர் வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே 'ஓர் ஒளி ஆண்டு தூரம்' எனப்படும்.
எனவே, விநாடிக்கு 3 இலட்சம் கிலோமீற்றர் வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இருந்து ரேடியோ வேக அதிர்வுகள் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வு இதற்கு முன்பு ஒரே ஒருமுறை நடந்துள்ளது. அப்போது வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டது.
கனடாவின் ஒகநாகன் பள்ளத்தாக்கில், சைம் வான் நோக்கியகத்தில் உள்ள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள்.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் (CHIME) வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.
இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.
சுருக்கமாக FRB என்று அழைக்கப்படும் ரேடியோ வேக அதிர்வுகள் எனப்படுபவை விண்வெளியில் தோன்றும் மில்லிசெகண்ட் நீளமே உள்ள பிரகாசமான ஒளி.
இதுவரை, விஞ்ஞானிகள் 60 முறை இத்தகைய ஒற்றை ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுள்ளனர். திரும்பத் திரும்ப ஒளிரும், மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளை காண்பது இது இரண்டாவது முறை.
இத்தகைய ரேடியோ வேக அதிர்வுகள் எதனால் தோன்றுகின்றன என்பதற்குப் பல காரணங்கள் கணிக்கப்படுகின்றன. மிக வலுவான காந்தப் புலம் உடைய, வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் இத்தகைய வலுவான சமிக்ஞைகள் தோன்றலாம் என்கிறார்கள் பல விஞ்ஞானிகள். ஒரு சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடத்தில் இருந்து தோன்றும் சமிக்ஞையாக இருக்கலாம் என்கின்றனர்.