நிலவை ஆய்வு செய்யும் பயணம் தொடரும் – இஸ்ரோ அறிவிப்பு
8 புரட்டாசி 2019 ஞாயிறு 03:49 | பார்வைகள் : 9041
நிலவில் ஆய்வினை மேற்கொள்ளும் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ இன்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்திரயான் 2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை எட்டிவிட்டோம். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் தரையிறங்கும் பகுதியை நிலவில் தரையிறக்கும் முயற்சி இடம்பெற்றது. இதன்போது சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தரையிறங்கும் பகுதி (Lander) நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.
இதன்போது தரையிறங்கும் பகுதி அதிக வேகத்தில் இறங்கியதாகவும் அதில் இருந்து எவ்வித சமிக்ஞையும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது தரையிறங்கும் பகுதியின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ அறிவித்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். மேலும், இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.