சீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்த பொருளால் குழப்பம்!
4 புரட்டாசி 2019 புதன் 16:39 | பார்வைகள் : 9132
நிலவின் மேற்பரப்பில் களிம்பு போன்ற பொருளை சீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்துள்ளது.
சேஞ்ச் 3 என்ற திட்டத்தின் மூலம் யுடு என்ற ஆய்வூர்தியை தயாரித்த சீன விண்வெளி நிறுவனமான சி.என்.எஸ்.ஏ., 2013ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி அன்று ஆய்வூர்தியை நிலவில் தரை இறக்கியது.
அதைத் தொடர்ந்து சேஞ்ச் 4 திட்டம் மூலம், யுடு 2 ஆய்வூர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நிலவில் தரை இறங்கிய அந்த ஆய்வூர்தி, நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சூரியனின் கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தில் இருந்து ஆய்வூர்தியை பாதுகாக்கும் வழக்கமான நடவடிக்கையை ஜூலை 28ஆம் தேதி அன்று நிலவின் நண்பகல் வேளையில் சீன விண்வெளி நிறுவனம் மேற்கொண்டது.
அப்போது, நிலவின் பள்ளத்தில் களிம்பு போன்ற பொருள் தென்பட்டது. நிலவின் மேற்பரப்பிற்கும், அந்தப் பொருளுக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். அந்தப் பொருள் என்ன என்பது தொடர்பாக தற்போது வரை விடை காணப்படவில்லை.
நிலவின் மீது விண்கல் மோதி அதன் மூலம் இது போன்ற பொருள் உருவாகி உருகி இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.