பூமிப்பந்தை அச்சுறுத்தும் ஆறாவது பேரழிவு ஆரம்பம்!
13 ஆடி 2017 வியாழன் 04:24 | பார்வைகள் : 9439
பூமியில் வன உயிரினங்களின் ஆறாவது பேரழிவு தொடங்கியிருப்பதாக எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த பேரழிவு கணிக்க முடியாத அளவுக்கு வேகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புவியின் உயிர்சூழலைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை அடுத்த 20 ஆண்டுகளுக்குள் எடுக்காவிட்டால் பல உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களே இன்றி மறைந்துபோகக் கூடும் என்கிறார்கள்.
முதுகெலும்புள்ள உயிரினங்களான மீன்கள், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன என 27,000 உயிரினங்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக 177 பாலுட்டி இனங்கள் குறித்து 1900 முதல் 2015ம் ஆண்டு வரை உள்ள தகவல்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பாலூட்டி இனங்களில் பெரும்பாலானவை தங்களின் வாழ்விடத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை இழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. அவற்றில் காண்டாமிருகம், உராங்குட்டான், கொரில்லாக்கள் உள்ளிட்ட 40 சதவீத விலங்குகளின் வாழ்விடம் 80 சதவீதம் அளவுக்குக் குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பாக இருந்த சிறுத்தை, சிங்கம் மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் சேர்ந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உலக அளவில் சிங்கங்களில் எண்ணிக்கை 20,000 என்ற அளவிலும், சிறுத்தைகளின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், பெரிய பாண்டா கரடிகளின் எண்ணிக்கை 500 முதல் 1,000-மாகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பூமி சந்தித்த பேரழிவுகள்
பூமி தோன்றியது முதல் இதுவரை 5 முறை உயிரினங்களின் பேரழிவுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆர்டோவிசியன் இறுதிக்கால பேரழிவு (End-Ordovician mass extinction):
முதல் பேரழிவாகக் கருதப்படும் இது 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை நடந்த பேரழிவுகளில் இரண்டாவது பெரிய அழிவாக இது கருதப்படுகிறது. இந்த பேரழிவின்போது கடலில் வாழ்ந்த 85 சதவீத உயிரினங்கள் அழிந்துபோனதாகக் கூறப்படுகிறது.
லேட் டீவோனியன் பேரழிவு (Late Devonian mass extinction):
375 முதல் 359 மில்லியன் ஆண்டுகளுக்கு ஏற்பட்ட பருவநிலை மாறுபாட்டால் கடலில் வாழ்ந்த பெரும்பாலான மீன் இனங்கள் அழிவைச் சந்தித்தன. அதன்பாதிப்பால் பலநூறு ஆண்டுகளுக்கு கடலில் பவளப்பாறைகள் வளர்ச்சி என்பது இல்லாமலேயே போனது.
இறுதி பெர்மியன் பேரழிவு (End-Permian mass extinction (the Great Dying)):
இதுவரை நடந்த பேரழிவுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் இந்த அழிவு 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறுகிறார்கள். இந்த அழிவின்போது சுமார் 97 சதவீத உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்துபோயின.
இறுதி ட்ரையாசிக் பேரழிவு (End-Triassic mass extinction):
ட்ரையாசிக் காலத்தின் தொடக்கத்தில் டைனோசர்கள் இருந்தன. அந்தக் காலத்தில் டைனசரைப் போன்ற ராட்சஷ விலங்குகள் பல இருந்தன. அவைதான் நீர் நில உயிரினங்களில் ஆதிக்கம் செலுத்தின. 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரழிவில் அவை பெரும்பாலும் அழிந்தன.
இறுதி க்ரீடாசியஸ் பேரழிவு (End-Cretaceous mass extinction):
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் இருந்து பூமியில் மோதிய குறுங்கோள் ஒன்றால் இந்த பேரழிவு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பேரழிவே பூமியில் இருந்து டைனோசர்கள் முற்றிலும் அழிந்துபோகக் காரணமாக அறியப்படுகிறது.
தற்போது ஆறாவது பேரழிவு நிகழ்ந்து வருகிறது