1,000 நாட்களை நிறைவு செய்தது மங்கள்யான் விண்கலம்!
20 ஆனி 2017 செவ்வாய் 05:16 | பார்வைகள் : 9590
இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ரூ.450 கோடியில் இந்தியாவில் மங்கள்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி புவி ஈர்ப்பு பரப்பை மங்கள்யான் விண்கலம் கடந்து சென்றது.
2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் அது நிலை நிறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக சுற்றி வருகிறது. இதுவரை 715-க்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது. அதோடு செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. உபரி எரிபொருளால் மங்கள்யான் விண்கலம் கூடுதலாக 6 மாதங்கள் செயல்படும் என இஸ்ரோ முதலில் தெரிவித்தது. பின்னர் மங்கள்யான் மேலும் பல ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்று 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து இருந்தார்.
1,000 நாட்கள் நிறைவு
இந்த நிலையில், மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நேற்றுடன் 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளை கணக்கிடும்போது இந்த மங்கள்யான் 973.24 நாட்கள் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை 388 முறை மங்கள்யான் சுற்றி வந்துள்ளதாகவும், மேலும், தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.