பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு!
6 கார்த்திகை 2016 ஞாயிறு 19:27 | பார்வைகள் : 9938
பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களின் தகவலின்படி,
சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்று வெளியேறியுள்ளது. இது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு பெருமளவில் அழுத்தப்பட்டுள்ளது.
புவிகாந்த புயல்
அதன்பின் கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது. இதனால் அதிகளவிலான காஸ்மிக் கதிர்கள் வெளியேறியுள்ளது. இந்த வெளியேற்றத்தினால் பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அடையாளம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஆய்வு
இந்தியாவில் தமிழகத்தின் ஊட்டியில் அறிவியல் ஆய்வுக்கான டாடா இன்ஸ்டியூட்டில் காஸ்மிக் கதிர் ஆய்வகம் அமைந்துள்ளது. இங்கு கிரேப்ஸ்-3 முவான் என்ற தொலைநோக்கி உள்ளது.
இது, கடந்த ஆண்டில் 20 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் அளவுள்ள விண்வெளி காஸ்மிக் கதிர்களானது 2 மணிநேரம் வரை வெளியாகியுள்ளது என பதிவு செய்துள்ளது.
இந்த பிளாஸ்மா மணிக்கு 25 இலட்சம் கி.மீட்டர்கள் வேகத்தில் நமது பூமி மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் ஆரம் போன்று 11 முதல் 4 மடங்கு என்ற அளவில் பூமியின் காந்தபுல அடுக்கில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இது கடுமையான புவிகாந்த புயலை தோற்றுவித்துள்ளது. அதனால் பூமத்திய ரேகை பகுதியில் இருந்து அதிக தொலைவில் அமைந்துள்ள பல நாடுகளில் ஆரோரா போரியாலிஸ் எனப்படும் பச்சை நிற ஒளிகள் தோன்றுவதும் மற்றும் வானொலி சமிக்ஞைகள் மறைவதும் ஆக இருந்துள்ளது.
கதிரியக்க பாதிப்பு
இதனை அடுத்து பூமியின் காந்தபுல அடுக்கானது அதன் ஆரத்தினை போன்று பல இலட்சம் கி.மீட்டர்கள் விரிவடைந்துள்ளது. இது சூரிய மற்றும் காஸ்மிக் கதிர்களின் தொடர்ச்சியான வெளியேற்றத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் முதல் வழியாக செயல்பட்டுள்ளது.
அதனால் அதிக ஆற்றல் கொண்ட கதிரியக்கத்தில் இருந்து நமது பூமியின் வாழ்வினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி பிரவதா கே. மொஹந்தி உள்ளிட்ட கிரேப்ஸ்-3 ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தொடர்ச்சியான காந்தபுல இணைவினால் பூமியின் காந்தபுல அடுக்கில் தற்காலிகம் ஆக வெடிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்த இணைவினால் குறைந்த ஆற்றல் கொண்ட விண்வெளி காஸ்மிக் கதிர் துகள்கள் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
இந்த வெடிப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி நள்ளிரவில் இந்த வெடிப்பு கிரேப்ஸ்-3 முவான் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டது.
இதில் கிடைத்த தகவல்களை, அந்த ஆய்வகத்தின் இயற்பியலாளர்கள் அடங்கிய குழு தங்களது முயற்சியில் உருவாக்கிய 1280-கோர் கம்ப்யூட்டிங் முறையினால் பல வாரங்கள் ஆய்வு செய்துள்ளது.
சூரிய புயல்கள் மனித நாகரீகத்திற்கு பெரிய இடையூறினை ஏற்படுத்த கூடியவை. இதனால் பெரிய மின்இணைப்பு தொடர்கள், ஜி.பி.எஸ். அமைப்புகள், செயற்கைக்கோள் இயக்கங்கள் மற்றும் தொலைதொடர்புகளில் பெரும் பாதிப்பு ஏற்பட கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் கூறுகையில், "பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாது. ஆனால் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பாதிக்கப்படலாம். கடந்த 1886ஆம் ஆண்டு காந்தபுலத்தில் விரிசல் ஏற்பட்டது. அப்போது தந்தி கம்பங்கள் செயல் இழந்தன" என்று அவர் கூறியுள்ளார்.