செவ்வாயில் தரையிறங்க ஐரோப்பிய கலன் பயணம்
19 ஐப்பசி 2016 புதன் 17:10 | பார்வைகள் : 10056
செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க ஐரோப்பிய ஆய்வு கலன் ஒன்று தனது தாய் விண்கலத்தில் இருந்து கடந்த ஞாயிறன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
577 கிலோகிராம் ஆய்வு கலன் மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து வரும் புதன்கிழமை சோதனையோட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு செவ்வாயில் தரையிறக்க ஏற்பாடாகியுள்ளது.
இதன்போது ஆறு நிமிட இடைவெளிக்குள் ஆய்வு கலன் மணிக்கு 21,000 கிலோமீற்றர் வேகத்தில் இருந்து பூஜ்யமாக குறைந்து செவ்வாயின் தூசு மேற்பரப்பில் தரையிறங்கும்.
இது ஒரு சவாலான முயற்சி என்று ஜெர்மனியில் இருக்கும் கட்டுப்பாட்டகம் குறிப்பிட்டுள்ளது. செவ்வாயில் உயிர்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கவே இந்த ஆய்வு கலன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா கூட்டாக கடந்த மார்ச் மாதம் அனுப்பிய விண்கலமே ஏழு மாதம் பயணித்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.
செவ்வாயை நோக்கி தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் ஸ்கையாபரலி அய்வு கலன் ஐரோப்பா செவ்வாயில் தரையிறங்கும் இரண்டாவது முயற்சியாகும். 2003 ஆம் ஆண்டு பிரிட்டனின் பீகில் 2 விண்கலத்தை தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.