வால் நட்சத்திரத்தில் மோதியது ரொசெட்டா
1 ஐப்பசி 2016 சனி 00:37 | பார்வைகள் : 10120
வால் நட்சத்திரத்தை வலம் வந்த ரொசெட்டா விண்கலம் தனது ஆய்வுகளை முடித்துக் கொண்டு நேற்று அந்த வால் நட்சத்திரத்தில் மோதியது.
ஐரோப்பிய விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்ட ரொசெட்டா விண்கலம் 6 பில்லியன் கிலோமீற்றர் விண்வெளியில் பயணித்தே 67பீ சுரியூமொவ் -- கெராசிமென்கோ வால் நட்சத்திரத்தை அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வால் நட்சத்திரத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட ரொசெட்டா கடந்த வியாழக்கிழமை தன்னை அழித்துக் கொள்வதற்கான பயணத்தை ஆரம்பித்ததாக கட்டுப்பாட்டகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ரொசெட்டா விண்கலம் நேற்று மாலை வால் நட்சத்திரத்தில் தன்னை தானே மோதிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த மோதலின் பின் ரொசெட்டா, தப்பி பிழைக்கும் என்று எதிர்பார்க்காத போதும் அதன் செயற்பாடு தொடர்ந்தால் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ரொசெட்டா வால் நட்சத்திரத்தை நோக்கி மோதச் செல்லும் வழியில் அதன் கெமராக்கள் மற்றும் ஆய்வு கருவிகள் செயற்பட்டு பூமிக்கு தரவுகளை அனுப்பியுள்ளன.
ரொசெட்டா விண்கலம் 10 ஆண்டு பயணத்தின் பின் 2014 ஓகஸ்ட் மாதத்திலேயே 67பீ வால் நட்சத்திரத்தை அடைந்தது. கடந்த 25 மாதங்களாக வால் நட்சத்திரத்தை வலம் வந்த ரொசெட்டா 100,000 படங்கள் மற்றம் தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.
இதன் மூலம் வால் நட்சத்திரம் ஒன்றின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி முன்னர் அறியப்படாத பல தகவல்களையும் திரட்ட உதவியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது ரொசெட்டா 2014 நவம்பரில் பீலியா ஆய்வு இயந்திரம் ஒன்றை வால் நட்சத்திரத்தில் தரையிறக்கியபோதும் அது செயற்படுவதில் தோல்வி அடைந்தது.
67பீ வால் நட்சத்திரம் தற்போது சூரியனில் இருந்து 573 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருப்பதோடு, நாளுக்கு நாள் மேலும் தொலைதூரத்திற்கு நகர்ந்து வருகிறது. இந்நிலையில் விண்கலத்திற்கு குறைந்த அளவே சூரிய சக்தி கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த 67பீ வால் நட்சத்திரம் மிகக் குறுகிய காலத்தை உடைய ஒழுக்கில் சூரியனைச் சுற்றி வரும் வால் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு 6 வருடத்துக்கும் ஒரு முறை இது சூரியனையும் பூமியையும் நெருங்கி வருகின்றது. சூரிய குடும்பத்தில் மிகப் பிரபலமான ஹேலியின் வால் நட்சத்திரம் ஒவ்வொரு 76 வருடத்துக்கு ஒரு முறையே பூமியை நெருங்கி வருகின்றது. ஹேலியின் வால் நட்சத்திரம் இனி 2061 இலேயே பூமிக்கு அண்மையில் வருகின்றது. சூரிய குடும்பத்தில் உள்ள ஏனைய வால் நட்சத்திரங்கள் பல, ஆயிரக் கணக்கான வருடங்களுக்குப் பின்னர் தான் சூரியனுக்கு அண்மையில் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.